முதல்வர் விஜய் தலைமையில் சிவாஜி கணேசனின் நூற்றாண்டு விழா நடத்தப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்..!
நடிகர் சிவாஜி கணேசனின் 25-ஆம் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை அடையாறில் உள்ள சிவாஜி நினைவு மண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர் ராஜ்மோகன், நடிகர் பிரபு, சிவாஜி குடும்பத்தினர் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் மாலை அணிவித்து, திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரபு, "சிவாஜி கணேசனின் 25-வது நினைவு நாளில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி. எனது வேண்டுகோளை ஏற்று இங்கு வந்த அமைச்சர் ராஜ்மோகனுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2028 ஆம் ஆண்டு சிவாஜி கணேசனின் நூற்றாண்டு விழா வருகிறது. அந்த விழாவை முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் பிரம்மாண்டமாக நடத்துவதாக தெரிவித்திருக்கிறார். அந்த நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். இதற்காக அமைச்சர் ராஜ்மோகனுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்
இதையடுத்து செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "சிவாஜி கணேசன் எங்கள் கொள்கைத் தலைவர் காமராஜரின் பக்தர். முத்தமிழறிஞர் கலைஞரின் வாழ்நாள் நண்பர். கலைத்துறையின் பிதாமகனாக திகழ்ந்தவர்.
பாரதியார், வ.உ.சிதம்பரனார், கர்ணன் போன்ற வரலாற்று மாந்தர்களை நாம் நேரில் பார்த்ததில்லை. ஆனால், அவர்களை நம் கண்முன் உயிரோட்டமாக கொண்டு வந்தவர் சிவாஜி கணேசன். அவரது நூற்றாண்டு விழா பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வாக இருக்கும். வரலாறும், தமிழ் சினிமாவும் பெருமைப்படும் வகையில், சரித்திரம் வியக்கும் அளவுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் மிகப்பெரிய விழாவாக நடத்தப்படும். இது எங்களுக்கு பெருமை அல்ல கடமை" என்றார்.