×

"ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்ட மனுக்கள் தீர்வு காணப்பட்டவை... அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி"- சிவகங்கை ஆட்சியர்

 

உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் ஆற்றில் கிடந்ததாக செய்தி வெளியான நிலையில் உண்மை நிலை பற்றி விசாரணை நடத்த மாவட்ட எஸ்.பியிடம் கோட்டாட்சியர் புகார் அளித்துள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி விளக்கம் அளித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட  உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் வீசப்பட்டிருந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 21, 22-ம் தேதிகளில் பெறப்பட்ட நூற்றுக்கும் அதிகமான ‘உங்களுடன் ஸ்டாலின்’ மனுக்கள், வைகை ஆற்றுப் பாலத்தின் கீழ் கொட்டப்பட்டதை அறிந்த அதிகாரிகள், அவற்றை கைப்பற்றினர்.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சிவகங்கை ஆட்சியர், “உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் ஆற்றில் கிடந்ததாக செய்தி வெளியான நிலையில் உண்மை நிலை பற்றி விசாரணை நடத்த மாவட்ட எஸ்.பியிடம் கோட்டாட்சியர் புகார் அளித்துள்ளோம். திருப்புவனம் அருகே வைகை ஆற்றங்கரை பகுதியில் `உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் தொடர்பான மனுக்கள் கிடைத்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.  இது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளோர் மீது, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட மனுக்களில் ஆறு மனுக்கள் ஏற்கனவே தீர்வு காணப்பட்டவை ” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.