×

சங்கரன்கோவில், காரைக்குடி, காட்பாடி, வட்டங்களில், சிப்காட் தொழிற்பூங்கா : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா..!

 

தமிழக சட்டசபையில் நேற்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது. விவாதத்தில் பங்கேற்று பேசிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதில் அளித்து பேசினார். நிறைவாக, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

1. சென்னைக்கு அருகில் சர்வதேச தரத்தில் ஒரு பிரத்யேக தைவானிய தொழில் பூங்கா அமைக்கப்படும்.  தைவானிய நிறுவனங்களிடமிருந்து ரூ.10,000 கோடி முதலீடுகளை ஈர்ப்பதை இந்த பூங்கா இலக்காகக் கொண்டிருக்கும். இதனால் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.

2. அமெரிக்கா, ஜெர்மனி, தென் கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளிலுள்ள முதலீட்டாளர்களுக்கு நேரடி வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு சேவைகள் வழங்குவதற்கு, இந்நாடுகளில் வழிகாட்டி நிறுவனத்தின் அமர்வுகள் அமைக்கப்படும்.

3. நாகப்பட்டினம் மாவட்டத்தில்  600 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கும் விதமாக மினி டைடல் பூங்கா அமைக்கப்படும்.

4. தமிழ்நாட்டிலுள்ள தொழில் நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களின் அருங்காட்சியகம் சென்னையில் அமைக்கப்படும்.

5.  சின்னசேலம்,  சங்கரன்கோவில், காரைக்குடி, காட்பாடி, வட்டங்களில், சிப்காட் தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்படும்.

6. திருப்பத்தூர் மாவட்டம்  நாட்றம்பள்ளி வட்டத்தில்  தோல் அல்லாத காலணி உற்பத்திப் பூங்கா உருவாக்கப்படும்.

7. திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சிப்காட் டெக்ஸ் பார்க்ஸ்   எனும் ஆயத்த தொழிற்கூட வசதிகள்  ஏற்படுத்தப்படும்.

8. திருவள்ளூர் மாவட்டம்  கும்மிடிப்பூண்டி, மாநல்லுார் மற்றும் தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காக்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்காக கொடுங்கையூர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நாளொன்றுக்கு 22.70 மில்லியன் லிட்டர் மூன்றாம் நிலை மறுசுழற்சி நீர் விநியோகிப்பதற்கான அமைப்பு ரூ.380 கோடியில் ஏற்படுத்தப்படும்.

9.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிள்ளைப்பாக்கம், ஒரகடம் மற்றும் வல்லம் வடகால் தொழிற்பூங்காக்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் தங்குமிட தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் 2,000 படுக்கைகள் கொண்ட தொழிலாளர் தங்குமிட வசதிகள் உருவாக்கப்படும்.

 10. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், ராஜாமடத்தில் சுமார் 100 ஏக்கரில் கடல்சார் உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி பூங்கா அமைக்கப்படும்.  

 இவ்வாறு அவர் பேசினார்.