×

சிங்கபெருமாள் கோவில் - செய்யாறு 4 வழிச்சாலை. திட்டம்: தி.மு.க. அரசின் டெண்டரை ரத்து செய்தது த.வெ.க. அரசு..!!

 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் தொழில்வழிச்சாலையில், தொழிற்சாலைகளின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் இருபுறமும் சேவைச் சாலைகளுடன் கூடிய 4 வழிச்சாலை அமைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டது.

அதன்படி, முதலாவது பிரிவாக வளையக்காரனை முதல் பழவேரி வரை 14.50 கிலோமீட்டர் தொலைவிற்கு 4 வழிச்சாலை, இரண்டாவது பிரிவில் பழவேரி முதல் புலிவாய் வரை 13.40 கிலோமீட்டர் தொலைவிற்கும், மூன்றாவது பிரிவில் புலிவாய் முதல் மனம்பதி வரை 15.30 கிலோமீட்டர் தொலைவிற்கும் சாலை அமைக்கும் பணி திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த மூன்று பணிகளும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து பயன்படுத்தும் ஒப்பந்த முறை அடிப்படையில் செயல்படுத்த கடந்த அரசு திட்டமிடப்பட்டிருந்தன. அதற்கான கடந்த மார்ச் 10-ம் தேதி தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டு, பணிகளை மேற்கொள்ள நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன.

இந்நிலையில், நிர்வாக காரணங்களால் இந்த மூன்று பிரிவுகளுக்கான டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.

அதற்கான திட்ட முன் மொழிவு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதி முறைகளின் அடிப்படையில், நிர்வாக காரணங்களால் டெண்டர்களை ரத்து செய்வதாக ஜூலை 22 அன்று வெளியிடப்பட்ட திருத்த அறிவிக்கைகள் மூலம் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

4 வழிச்சாலைக்கான டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சாலை அமைக்கும் பணிகளுக்கான புதிய டெண்டர் அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்பகுதியில் சமீபக் காலமாக தொழில் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. சிப்காட் தொழிற்பேட்டையில் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வரும் நிலையில், சென்னை - செய்யாறு இடையேயான போக்குவரத்து வசதியை மேம்படுத்தி, கனரக வாகங்கள் செல்லும் வகையில் செய்யாறு சிப்காட் தொழில்வழிச்சாலையின் ஒரு பகுதியாக இத்திட்டம் முன்மொழியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.