தியேட்டரில் ரிலீசான 'அரசன்' ப்ரோமோ- வீடியோவில் சர்ப்ரைஸ் கொடுத்த சிம்பு
அரசன் பட ப்ரோமோ திரையிடலில் ரசிகர்களுக்கு நடிகர் சிம்பு வீடியோவில் வந்து சர்ப்ரைஸ் செய்தார்.
வெற்றிமாறன்- சிம்பு கூட்டணியில் அரசன் திரைப்படம் உருவாக உள்ளது. இதற்கு அனிருத் இசை அமைக்கிறார். ஏற்கனவே தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான வடசென்னை (யுனிவர்சில்) திரைப்பட கதையை ஒட்டி இப்படம் உருவாகிறது. இதற்கான ப்ரோமோ வீடியோ நாளை இணையத்தில் வெளியாக உள்ள நிலையில், புதிய முயற்சியாக இன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் பிரத்தியேகமாக திரையிடப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக சென்னை கமலா திரையரங்கில் சிம்புவின் ரசிகர்கள் அதிக அளவில் கூடி, சிம்புவின் பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்து, பாடல்களுக்கு நடனமாடி கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து ரசிகர்களோடு ப்ரோமோவை பார்ப்பதற்காக படத்தின் இயக்குனர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் கலைபுலி எஸ். தாணு, இயக்குநர் மிஷ்கின், சிம்புவின் தந்தை டி. ராஜேந்தர் உள்ளிட்டோர் வருகை தந்து ரசிகர்களோடு பார்த்து ரசித்தனர். ப்ரோமோவில் தன்னுடைய வாழ்க்கை கதையை இயக்குனர் நெல்சனிடம் விவரிப்பது போன்று இடம் பெற்றிருக்கும் நிலையில், அதில் என்னுடைய கதையில் தனுசை நடிக்க வையுங்கள் அருமையாக இருக்கும் என சிம்பு சொல்லுவது திரையரங்கை அதிர வைத்தது.
ப்ரோமோ வெளியிட்டுருக்கு பிறகு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஆக வீடியோவில் தோன்றிய நடிகர் சிம்பு ரசிகர்களிடம் ஒரு வேண்டுகோளை வைத்தார். வீடியோவில் பேசிய சிம்பு, அனைவரும் நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன், உங்களோடு சேர்ந்து பார்க்கலாம் என நினைத்தேன் ஆனால் பல்வேறு காரணங்களால் அது முடியவில்லை. விரைவில் உங்களை சந்திக்கிறேன் என்றவர், இந்த நேரத்தில் என்னுடைய ரசிகர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள், பசியாக இருக்கும் எந்த உயிரினமாக இருந்தாலும் அன்னதானம் செய்யுங்கள் இதை செய்தால் நான் மிக மிக சந்தோஷப்படுவேன். Love you All நீங்கள் இல்லாமல் நான் இல்லை என சிம்பு பேசியுள்ளார்.