தமிழ்நாட்டை நாம் ஆள வேண்டுமா? அல்லது டெல்லயில் உள்ளவர்களா..? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி..!
திண்டுக்கல் மாவட்டத்தின் வேலுநாச்சியார் வளாகத்தில் நடைபெற்ற மாபெரும் அரசு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுமார் 1,595 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார். அமைச்சர்கள் ஐ.பெரியசாமி மற்றும் சக்கரபாணி ஆகியோரின் பணிகளைப் பாராட்டிய அவர், திண்டுக்கல்லை வளர்ச்சியில் சிறந்த மாவட்டமாக மாற்ற அரசு உறுதியுடன் இருப்பதாகத் தெரிவித்தார். குறிப்பாக, கடந்த அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகளை விட, திமுகவின் 4.5 ஆண்டுகளில் 19 லட்சம் மெட்ரிக் டன் கூடுதலாக நெல் கொள்முதல் செய்து உணவுத்துறை சாதனை படைத்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை, 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்' என்ற பெயரில் செயல்படுத்த ஆணையிட்டுள்ளதாக முதலமைச்சர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இது சுமார் 6.5 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எதிர்காலத்திற்கு சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் என்றும், அவர்களின் ஓய்வுக்கால வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றும் ஒளியாகத் திகழும் என்றும் அவர் பெருமிதம் கொண்டார்.
தமிழக மக்களின் பொங்கல் பண்டிகையைச் சிறப்பிக்க, 2.22 கோடி அரிசி அட்டைதாரர்களுக்குத் தலா 3,000 ரூபாய் ரொக்கப்பணம் வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் விலையில்லா வேட்டி-சேலைகள் அடங்கிய பரிசுத் தொகுப்புக்காக மொத்தம் 7,600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சி பொங்கல் "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்" உங்கள் குடும்பங்களுக்குத் தரும் பரிசு என அவர் உருக்கமாகக் குறிப்பிட்டார்.
மாணவர்களின் கல்வி நலனுக்காக "உலகம் உங்கள் கையில்" என்ற திட்டத்தின் கீழ் 20 லட்சம் மாணவர்களுக்கு உயர்தர மடிக்கணினிகள் (Laptop) வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய முதல்வர், அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உலகத் தரத்திலான கல்வியைப் பெற வேண்டும் என்பதே தனது அரசின் நோக்கம் என்றார். "நீங்கள் படியுங்கள், மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்" என மாணவர்களுக்கு அவர் ஊக்கமளித்தார்.
ஆன்மீகப் பணிகள் குறித்துப் பேசிய முதல்வர், திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை 4,000 திருக்கோவில்களுக்குக் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், 7,701 கோடி ரூபாய் மதிப்பிலான 7,655 ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. உண்மையான பக்தர்கள் மற்றும் ஆன்மீகப் பெரியவர்கள் விரும்பும் ஆட்சியாகத் தனது அரசு திகழ்வதாகவும், அனைத்துச் சமயத்தவரின் நம்பிக்கையையும் மதித்துக் காப்பதாகவும் அவர் கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சரின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த ஸ்டாலின், தமிழ்நாட்டில் இந்துக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாகக் கூறுவது அப்பட்டமான பொய் என்றும், பதவியில் இருப்பவர் இப்படி அவதூறு பரப்புவது கண்ணியமல்ல என்றும் சாடினார். மத ரீதியாகப் பிளவு ஏற்படுத்த நினைப்பவர்களின் எண்ணம் தமிழ்நாட்டில் ஒருபோதும் ஈடேறாது என்றும், இந்த ஸ்டாலின் இருக்கும் வரை தமிழகத்தில் கலவரங்களுக்கு இடமில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
2026-ம் ஆண்டு தேர்தல் குறித்துப் பேசிய முதல்வர், "தமிழ்நாட்டில் மோடி ஆட்சி அமைய வேண்டுமா?" என்று அமித் ஷா கேட்ட கேள்விக்கு மக்கள் சரியான பதில் அளிப்பார்கள் என்றார். அதிமுக-விற்கு வாக்களித்தால் பாஜக-தான் தமிழ்நாட்டை ஆளும் என்பதை அமித் ஷாவே ஒப்புக்கொண்டுள்ளார். 2026 தேர்தல் என்பது தமிழர்களின் சுயமரியாதைக்கும், டெல்லி அதிகாரத்திற்கும் இடையிலான சவால் என்று அவர் வர்ணித்தார்.
இறுதியாக, மக்கள் எப்போதும் திமுக அரசின் பக்கமே இருக்கிறார்கள் என்றும், வரும் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று நல்லாட்சியைத் தொடர்வோம் என்றும் முதல்வர் உறுதிபடக் கூறினார். 'திராவிட மாடல் 2.0' மூலம் தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றுவதே தனது இலக்கு என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.