×

உங்கள் அலட்சிய ஆட்சிக்கு எங்கள் குழந்தைகள் பலியாக வேண்டுமா? - நயினார் நாகேந்திரன் கேள்வி..!!

 
நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்டுள்ள செய்தியை வாசிக்கும் பொழுதே ஈரக்குலை நடுங்குகிறது. முந்தைய ஆட்சியைப் போல, தற்போதைய தவெக ஆட்சியிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைப் பார்த்தால், “மாற்றம்” என்று உங்களை நம்பிய தமிழக மக்கள் ஏமாந்து போய்விட்டார்களோ என்று தோன்றுகிறது.
ஆம், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தையே உலுக்கிய கோவை சூலூர் 10 வயது சிறுமியின் வழக்கிற்கு பிறகாவது பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தாமல் நீங்கள் அலட்சியப்படுத்தியதன் விளைவுதான், தற்போது நமது மாநிலத்தின் அடுத்த மழலைச் செல்வத்தை நாம் பலி கொடுத்துள்ளோம். எந்தக் குழந்தைகளைக் கொஞ்சி, கெஞ்சி ஓட்டுக் கேட்டு ஆட்சி அமைத்தீர்களோ, அதே குழந்தைகளை மனிதர்கள் போர்வையில் உலவும் மிருகங்கள் வேட்டையாடுவதை கைகட்டி நீங்கள் வேடிக்கை பார்ப்பது கேவலத்தின் உச்சம்.
எனவே, அடுத்த குழந்தை பலியாவதற்கு முன்பாவது உங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து நீங்கள் விழித்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பையும், உரிமைகளையும் உறுதி செய்யும் சட்ட, திட்டங்களை வகுத்து அனைத்து குழந்தைகளின் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்ய உங்கள் தலைமையிலான அரசு ஆவண செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.