×

"நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைப்பதா?" - ரமேஷுக்கு அறநிலையத்துறை வழங்கப்பட்டதற்கு கி.வீரமணி கடும் கண்டனம்!

 

திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டின் தவெக தலைமையிலான கூட்டணி அரசின் அமைச்சரவை விரிவாக்கப்பட்டுள்ளது. புதிதாக 23 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். மேலும் விரிவாவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. முதல்முறை பதவியேற்றும் பல நாட்கள் துறைகள் ஒதுக்கப்படாமல் இருந்த சூழலில், தற்போது பதவியேற்பு விழா நடந்த உடனேயே அவர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டியலும் வெளிவந்துள்ளது. ஒடுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து மொத்தம் 7 பேர் இந்த அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர் என்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அக்கட்சியில் வெற்றி பெற்ற இரண்டு பார்ப்பனர்களுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் ஸ்ரீரங்கத்தில் வெற்றி பெற்ற பார்ப்பனர் ஒருவருக்கு இந்து சமய அறநிலையத்துறை வழங்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சிக்குரியதாகும்.

இந்தியாவிலேயே முன்னுதாரணமாகக் கோயில்களை நேர்மையுடனும், முறையான கணக்குகளுடனும் நிர்வகிப்பதற்காக நீதிக்கட்சி முதலமைச்சர் பனகால் அரசர் ராமராய நிங்கர் அரசால் உருவாக்கப்பட்டது இந்து சமய அறநிலையத்துறை. அது நிதி நிர்வாகத்துக்கானதாக மட்டுமின்றி, தீண்டாமைக் கூடாரங்களாக இருந்த கோயில்களை அனைத்து சமூகத்தினருக்கும் உரியதாக மாற்றுவதற்கான சமூகப் புரட்சிக்கு முக்கிய அடித்தளமாகவும் அச்சட்டம் அமைந்தது.

கோயில்கள் எல்லாம் பார்ப்பனர்கள் அதிகாரக் கொட்டமடிக்கும் இடமாகத் திகழ்ந்த நிலையில், அது அரசின் கட்டுப்பாட்டில் வந்த பிறகுதான், அனைத்து ஜாதியினரும் கோயில்களுக்குள் நுழைய முடியும் என்ற நிலை பல போராட்டங்கள், சட்ட முன்னெடுப்புகளின் வாயிலாகச் சாத்தியப்பட்டது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதற்குச் சட்டம் இயற்றி தீண்டாமையை ஒழிக்க முடிந்திருக்கிறது என்றால், அவை அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்கள் என்பதால் தான். தனியார் கோயில்கள், குறிப்பிட்ட ஜாதியினருக்கு உட்பட்ட கோயில்கள் என்பனவற்றில் இன்றும் கோயில் நுழைவே பிரச்சினைக்குரியதாக இருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

சமூக மாற்றத்துக்கான வேராக இருக்கும் காரணத்தால் தான் எப்படியாவது இந்து சமய அறநிலையத் துறையை ஒழித்துவிட வேண்டும் என்ற நோக்கில், ‘கோயில்களை மீட்போம்’ என்று ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது. அதன் பின்னணி முழுவதும் ஆர்எஸ்எஸ்- சங் பரிவாரே! தமிழ்நாட்டில் மதவாதக் கூட்டத்தால் கோயில்கள் அபகரிக்கப்படாமல் இருப்பதற்கும் இந்தச் சட்டமே காரணமாகும்.

நீதிமன்றங்களில் ஏராளமான அழிவழக்குகள், பொய் வழக்குகள் மூலம் இத்துறையின் மீது அவதூறையும், ஏதாவது ஒரு வகையில் அதனை முடக்கவும், அதன் செயல்பாடுகளை ஒடுக்கவும், அதன் வாயிலாக மீண்டும் பார்ப்பன ஆதிக்கத்தைக் கோயில்களில் நிலைநாட்டவும் ‘வழக்குப் போரே’ தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதிகமில்லை கடந்த 10 ஆண்டுகள் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தாலே எத்தனை கடுமையான சூழல்களைக் கடந்து இத்துறை காக்கப்பட்டிருக்கிறது என்று புரியும். அண்மைக் காலத்தின் உச்சநீதிமன்றப் போக்குகள், இத்துறையை நோக்கி நகர்வதை நம்மால் உணர முடிகிறது.

இப்படிப்பட்ட மிக முக்கியமான துறையின் முதன்மைச் செயலாளராகப் பார்ப்பன அம்மையார் ஒருவர் நியமிக்கப்பட்ட போதே, அதன் ஆபத்தை முதலைமைச்சருக்குச் சுட்டிக்காட்டி கடந்த மே 13- ஆம் தேதி அன்றே நாம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தோம். ஆனால், அந்த ஆபத்தை இன்னும் அதிகப்படுத்தும் வகையில் சிறீரங்கத்தின் எம்எல்ஏ ரமேஷை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக்கியிருப்பது ‘நண்டைச் சுட்டி நரியைக் காவல் வைப்பதற்கு’ ஒப்பாகும்.

பெருந்தலைவர் காமராசர் அமைச்சரவையில் பா.பரமேஸ்வரன் ஒருவர் தான், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்திருக்கிறார்.அப்போது அதனைப் பாராட்டி, மகிழ்ந்து தந்தை பெரியார் எழுதியிருக்கிறார்; எல்லா கூட்டங்களிலும் பேசியிருக்கிறார்.

ஆர்எஸ்எஸ் சகவாசம் இல்லாதவராக, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களிலிருந்து ஒருவரை நியமித்திருக்கலாம். ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்திருக்கும் 7 பேரில் ஒருவரை இத்துறைக்கு அமைச்சராக்கியிருக்கலாம். இதுவரை பெண் ஒருவர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரானதில்லை. பெண் அமைச்சர் ஒருவரை நியமித்திருக்கலாம். அதுதான் உண்மையான ‘மாற்றம்’ என்பது!

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் பிரச்சினை உள்பட இன்னும் பலவற்றில் முக்கிய வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அர்ச்சகர் பயிற்சி அனைத்து ஜாதியினருக்கும் வழங்கப்பட்டு, அவர்களுக்கு பணி நியமனங்களும் வழங்கப்பட வேண்டியிருக்கிறது. கோயில்களை அபகரிக்க சூழ்ச்சி வலை பின்னப்பட்டுக் கொண்டிருக்கிறது. மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய காலகட்டம் இது!

இந்தப் பின்புலங்களை எல்லாம் முதலமைச்சர் அறிந்துதான் இந்த முடிவை எடுத்திருக்கிறாரா? இரண்டாயிரம் ஆண்டு ஆதிக்கக் குழியிலிருந்து சமூகநீதித் தேரை நூறாண்டு காலத்தில் மேலேற்றி முன்னகர்த்தி வந்திருக்கிறோம். அதனைப் பின்னுக்குக் கொண்டு போய் மீண்டும் குழியில் தள்ள வழி செய்யக் கூடாது! சமூகநீதிக்கு ‘ரெட்டைத் தாழ்ப்பாள்’ போடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு அமைச்சர்,முதன்மைச் செயலாளர் என்று இரண்டு பார்ப்பனர்கள் நியமிக்கப்பட்டிருப்பதை விட பேராபத்து வேறு என்ன உண்டு?

மூன்று சதவிகிதம் உள்ள பார்ப்பனர்களுக்கு 6% அமைச்சரவையில் இடம் என்பதே அதிகப்படியானது. அதில், இந்து சமய அறநிலையத் துறையும் தாரை வார்க்கப்பட்டிருப்பது ஆபத்தானது, கண்டனத்திற்குரியது. உடனடியாக விழித்துக் கொண்டு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! இந்து சமய அறநிலையத் துறைக்குப் பார்ப்பனரல்லாத அமைச்சரும், செயலாளரும் நியமிக்கப்பட வேண்டும்." என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.