அம்மோனியா கசிவு விபத்தில் அதிர்ச்சி திருப்பம்!
திருவள்ளூரில் அம்மோனியா கசிவு விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு பயன்படுத்தப்பட்ட ஆதார் அட்டை, ஒடிஷாவை சேர்ந்த பூர்ணிமா ஜூவாங்கா உடையது என தெரியவந்துள்ளது.
திருவள்ளூர் கன்னிகைபேர் கிராமத்தில், புனித பீட்டர் & பால் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஜூன் 21ஆம், ஞாயிற்றுக்கிழமை அன்று, கூலிங் பைப்பில் இருந்து திடீரென அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் அந்த வளாகத்தில் தங்கியிருந்த கிட்டத்தட்ட 80 பேர் பாதிக்கப்பட்டனர். வாயுக்கசிவு ஏற்பட்ட சில நிமிடங்களிலேயே அங்கிருந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இந்த விபத்தில் இதுவரை மொத்தம் 10 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் வீடு திரும்பியுள்ளனர். 67 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இந்நிலையில் ருவள்ளூரில் அம்மோனியா கசிவு விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு பயன்படுத்தப்பட்ட ஆதார் அட்டை, ஒடிஷாவை சேர்ந்த பூர்ணிமா ஜூவாங்கா உடையது என தெரியவந்துள்ளது. உயிரிழந்ததாக பதிவு செய்யப்பட்ட பூர்ணிமா ஜூவாங்கா, ஆந்திராவில் உயிருடன் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். பூர்ணிமா ஜூவாங்காவின் ஆதார் விவரங்களை தவறாக பயன்படுத்தி மற்றொரு பெண் வேலைக்கு அமர்த்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மைனர்கள் உட்பட பலரை போலி அடையாளங்களுடன் வேலைக்கு அமர்த்தியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது. வெளிமாநில தொழிலாளர்களின் அடையாள விவரங்களை முறையாக சரிபார்த்து பதிவு செய்ய வேண்டிய அவசியம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.