ஷாக்கிங் நியூஸ் : 13 பேர் மீது ஏறி இறங்கிய பஸ்.. 4 பேர் பரிதாப பலி..!
மும்பை பாண்டுப் ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் நேற்று இரவு 10 மணியளவில் பெஸ்ட் பேருந்து பின்னோக்கி சென்றபோது 13 பேர் மீது ஏறி இறங்கியது. இந்த கோர விபத்தில் 3 பெண்கள், 1 ஆண் என 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர்; சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விபத்துக்கு காரணமான ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மும்பை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் அதிகளவில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு, போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பேருந்து விபத்து குறித்து காவல் துறை அதிகாரிகள் முதல்கட்ட விசாரணையில் வெளியான தகவலின்படி, மாநகரப் பேருந்து பின்னோக்கி இயக்கப்பட்ட போது 10 முதல் 12 பாதசாரிகள் மீது ஏறியுள்ளது. பேருந்து பின்னோக்கி சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த பாதசாரிகள் மீது மோதியுள்ளதாக மூத்த காவல் துறை அதிகாரி கூறியுள்ளார்.
இந்நிலையில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம் குறித்து சரியான தகவல் தெரியவில்லை எனவும், விபத்து நிகழ்ந்தவுடன் காயம் அடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளார்.
இதனிடையே விபத்தை நேரில் பார்த்தவர்கள் பேருந்தை ரிவர்ஸ் எடுத்த போது அதி வேகமாக இயக்கப்பட்டதாகவும், அதன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மீது மோதியதாகவும் தெரிவித்தனர்.