கோவையில் அதிர்ச்சி சம்பவம் : கிணற்றில் சாக்கு மூட்டையில் பெண் சடலம் மீட்பு!..!
கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை அருகே மேட்டுப்பாளையத்தில் இருந்து - அன்னூர் செல்லும் சாலையில் ராசிபுரம் என்ற பகுதியில் அமைந்துள்ளது தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை. தற்போது இந்த தொழிற்சாலை செயல்படாமல் உள்ளதால், அதை திருமண மண்டபமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், அதன் வளாகத்தில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து துர்நாற்றம் வந்துள்ளது.
கிணற்றிலிருந்து வீசிய துர்நாற்றத்தைத் தொடர்ந்து பொதுமக்கள் காவல் துறைக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றிற்குள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சாக்கு மூட்டை ஒன்றில் பெண்ணின் சடலம் இருப்பதை உறுதி செய்தனர்.
தொழிற்சாலைக் கிணற்றில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, அந்தப் பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. தடயவியல் நிபுணர்கள் மற்றும் காவல் துறையினர் சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட பெண் யார்? அவரைப் பல நாட்களுக்கு முன்பே கொலை செய்துவிட்டு, ஆதாரங்களை மறைக்கச் சாக்கு மூட்டையில் கட்டித் தொழிற்சாலைக் கிணற்றில் வீசியது யார்? என்பது குறித்துப் புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆள் நடமாட்டம் குறைவான, செயல்படாத இந்தத் தொழிற்சாலைப் பகுதியைச் சமூக விரோதிகள் குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தி வருகிறார்களா என்ற கோணத்திலும் காவல் துறை தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டத்தைக் கண்டறியக் காவல் துறையினர் முயற்சி செய்து வருகின்றனர். மேலும், காணாமல் போன பெண்கள் தொடர்பான புகார்கள் குறித்தும், காவல் துறையினர் தரவுத்தளத்தில் ஒப்பிட்டுப் பார்த்து அந்தப் பெண்ணின் அடையாளத்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், சாக்கு மூட்டையில் சடலமாக கிடந்த பெண் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் எனவும், சுமார் 20 - 25 வயதுக்குள் இருக்கலாம், திருமணமான பெண்ணாகவும் இருக்கலாம் என தெரியவந்தது. அதேசமயம், சடலம் அழுகிய நிலையில் இருப்பதால், முழுமையாக அடையாளம் காண முடியவில்லை. அந்த பெண்ணின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் எதுவும் தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேலும், அந்த பெண்ணை கொலை செய்து சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி, மேலே மிதந்து வராமல் இருக்க அதனோடு கல் ஒன்றையும் கட்டி கிணற்றில் வீசிச் சென்றுள்ளனர். 4 அல்லது 5 நாட்களுக்கு முன்னர் தான் பெண்ணின் சடலம் வீசப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. சம்பவம் நடந்த கிணற்றுக்கு அருகே கிடந்த சில துணிகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
தொடர்ந்து, பெண் மாயம் என ஏதாவது புகார்கள் வந்துள்ளதா? தொழிற்சாலைகள், மில்களில் பணியாற்றிய பெண் யாராவது மாயமாகியுள்ளனரா? இக்கொலை வழக்கில் தொடர்புடைய நபர்கள் யார்? பெண்ணை கொலை செய்து கிணற்றில் வீசியது யார்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.