×

வால்பாறையில் குலைநடுங்க வைக்கும் சம்பவம்! பால் வாங்க சென்ற சிறுவன் சிறுத்தை தாக்கி பலி...!

 

வால்பாறை பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான எஸ்டேட் அதிக அளவில் உள்ளன. தற்போது அப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தை புலி உள்ளிட்ட காட்டு விலங்குகளின் நடமாட்டம் பெருகியுள்ளது. இவைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர்.

இதனால், வனத்துறை அதிகாரிகள் உத்தரவின்பேரில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வனவிலங்குகள், பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு வராத வண்ணம் தடுத்து வருகின்றனர்.

இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வால்பாறை நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருந்து வந்தது. இந்த நிலையில், வால்பாறையில் பால் வாங்க சென்ற சிறுவன் சிறுத்தை தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை அருகே உள்ள வேவர்லி எஸ்டேட்டில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். இதில், சர்பேத் என்பவரது எட்டு வயது மகன் இஸ்லாம் பால் வாங்க சென்றுள்ளார். அப்போது தேயிலை தோட்ட பகுதியில் மறைந்து இருந்த சிறுத்தை சிறுவனை தாக்கியது. இதில், முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக காயமடைந்த சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சிறுவனின் உடலை கண்டு அவரது பெற்றோர் கதறி அழுத நிகழ்வு காண்போரை கண்கலங்க செய்தது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனின் உடல் அங்கு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகம் உள்ளதால் அதனை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.