டேஷ்கேமில் பதிவான பதைபதைக்கும் காட்சிகள்..! கேரளா விபத்தில் பறிபோன இரண்டு தோழிகளின் உயிர்கள்!
கேரள மாநிலம் கோட்டயம் அருகே புதன்கிழமை காலையில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில், ஸ்கூட்டரில் சென்ற இரண்டு 24 வயது இளம் பெண்கள் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
விபத்து நடந்தது எப்படி?
புதன்கிழமை காலை 8.30 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து நடந்த இச்சம்பவம் பின்னால் வந்த வாகனத்தின் டேஷ்கேம் (Dashcam) வீடியோவில் பதிவாகியுள்ளது.
ஆபத்தான முறையில் குறுகலான சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரமாகநின்ற மோட்டார் சைக்கிள் மற்றும் நடந்து சென்ற நபர் ஒருவரைத் தவிர்ப்பதற்காக முன்னால் சென்ற கார் திடீரென வேகத்தைக் குறைத்து விலகியுள்ளது. அப்போது அந்த காரின் மீது அஷ்லி மற்றும் கிருபா சென்ற ஸ்கூட்டர் லேசாக உரசியுள்ளது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த இருவரும், அந்த வழியாகக் கோட்டயம் நோக்கி வந்த தனியார் பேருந்தின் சக்கரத்திற்குள் சிக்கித் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹெல்மெட் அணிந்திருந்த போதிலும், பேருந்து அவர்கள் மீது ஏறி இறங்கியதால் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிர் துறந்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் யார்?
-
அஷ்லி அன் தாமஸ் (Ashley Ann Thomas): மீனடத்தைச் சேர்ந்த வி.வி.தாமஸ் என்பவரின் மகளான அஷ்லி, சமீபத்தில் ஐ.சி.சி.ஏ (ICCA) படிப்பை முடித்த சி.ஏ மாணவி ஆவார். இவரது வெற்றியை நண்பர்கள் கொண்டாடத் திட்டமிட்டிருந்த நிலையில், இந்த விபத்து குடும்பத்தினரை உலுக்கியுள்ளது.
-
கிருபா மெரின் குரியன் (Kripa Merin Kurian): பாம்படியைச் சேர்ந்த தந்தை குரியன் கடடும்புபாகம் என்பவரின் மகளான கிருபா, ஆஸ்திரேலியா பிரிஸ்பேன் நகரில் உள்ள ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்தில் முதுகலை சமூகப் பணி (MSW) படித்து வந்தார். விடுமுறைக்காக கடந்த அக்டோபர் 19 அன்று அதிகாலையில் தனது சகோதரர் கிரணுடன் ஆஸ்திரேலியாவில் இருந்து கேரளா திரும்பியிருந்தார். நவம்பர் 22-ல் தனது 25-வது பிறந்தநாளைக் கொண்டாடவிருந்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
தொடரும் காவல்துறையின் விசாரணை:
இந்த விபத்து குறித்து கோட்டயம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.எம்.சாபு மேத்யூ உத்தரவின்பேரில், காவல்துறையினர், தடயவியல் நிபுணர்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். குறுகலான சாலைகளில் வாகனங்களின் நெரிசல் மற்றும் நிறுத்தப்படும் வாகனங்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.