அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..! தவெக மாநாட்டிற்கு சென்ற இளைஞர் மாயம்: ஒரு வாரம் கழித்து சடலமாக மீட்பு!
வேலூரை சேர்ந்தவர் மதன். இவர் தவெக 2வது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தனது நண்பர்களுடன் மதுரைக்கு காரில் சென்றிருக்கிறார். மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு மதனும், அவருடைய நண்பர்களும் காரில் வேலூருக்கு திரும்பியுள்ளனர்.
திருச்சி அருகே காரை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்த அவர்கள் அனைவரும் சாப்பிடுவதற்காக அருகில் இருந்த ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அப்போது காரிலிருந்து கீழே இறங்கி சென்ற மதன் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நண்பர்கள் அக்கம் பக்கத்தில் விசாரித்ததுடன், அருகிலுள்ள பகுதிகளிலும் தேடியுள்ளனர். இருப்பினும் மதனை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால் சோகத்துடன் வேலூருக்கு திரும்பிய நண்பர்கள், மதனை காணவில்லை என்பதை குறிப்பிட்டு வாட்ஸ் அப் குழுக்களில் அவருடைய புகைப்படத்தை பதிவிட்டு தேடத் தொடங்கியுள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல் நிலையத்திலும் புகாரளித்தனர்.
இந்நிலையில், ஆகஸ்ட் 22ஆம் தேதி அரவக்குறிச்சி அருகே சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது எனவும், அது மதனின் உடலா என பார்க்க வரும்படியும் காவல்துறை சார்பில் மதனின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
தகவலின்பேரில் அரவக்குறிச்சிக்கு விரைந்து சென்ற உறவினர்கள் அது மதனின் உடல் என்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உடலானது மதனின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருச்சியில் காணாமல் போன இளைஞர் அரவக்குறிச்சிக்கு எப்படி சென்றார்? அங்கு அவருக்கு என்ன நேர்ந்தது? விபத்து எப்படி நேரிட்டது? அது தற்செயலாக நடந்ததா? என்பது போன்ற பல கோணங்களில் போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற பலருக்கு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில், அரியலூரைச் சேர்ந்த ஜெயசூர்யா என்ற இளைஞர் மாநாடு முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
அதேபோல், நீலகிரியைச் சேர்ந்த ரோஷன் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இந்நிலையில், மாநாட்டிற்குச் சென்று திரும்பியபோது காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.