×

தமிழக வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி! கார், பைக் 'பேன்சி' நம்பர் கட்டணம் பல மடங்கு உயர்வு...!!

 

தமிழ்நாடு அரசின் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் இரண்டு சக்கரம், நான்கு சக்கரம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கான பேன்சி எண் கட்டண உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தி அமைக்கப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில் 2 ஆயிரம் ரூபாய் முதல் 8 லட்சம் வரையில் கட்டணம் நிர்ணயிக்க முடிவு செய்து அரசு அறிவித்துள்ளது. போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், சிறப்பு பதிவெண் கட்டணம் தொடர்பாக வரைவு திருத்த கட்டண விபரத்தை அரசிதழில் வெளியிட்டுள்ளார்.

அதில், 'தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின் சமீபத்தில் வாகனங்களுக்கான சிறப்பு எண் (பேன்சி எண்) பெறுவதற்கு யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டாம். இடைத்தரகர்களை நம்பி அரசு நிர்ணயத்துள்ள கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணத்தை யாரும் செலுத்த வேண்டாம் என போக்குவரத்து துறை தெரிவித்திருந்தது.

அதேசமயம் வாகனங்களுக்கான சிறப்பு பதிவு எண் கட்டணங்களை திருத்தி அமைத்து தமிழக அரசுக்கான வருவாய் உயர்த்தும் பணியில் போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வாகனங்களுக்கான பேன்சி எண் என கூறப்படும், சிறப்பு பதிவெண்ணை முன் கூட்டியே பெறுவதற்கான கட்டணங்களை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு திருத்த அறிவிப்பு, தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு, வாகனத்தின் மதிப்பை அடிப்படையாக வைத்து 2,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட கார் மற்றும் பிற வாகனங்களுக்கு 20,000 ரூபாய் முதல் 1.50 லட்சம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.

அரசால் ஒதுக்கப்படும் முன்பதிவு எண்களுக்கு தற்போதைய வரிசை மற்றும் அடுத்த மூன்று வரிசைகளுக்கு 80,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் 13 மற்றும் 14-வது வரிசைக்கான சிறப்பு எண்களை பெற 8 லட்சம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையின் அடிப்படையில் சிறப்பு எண்கள் ஒதுக்கீடு செய்யும் போது அரசுக்கான வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.