×

விமானப் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்! விமானக் கட்டண உச்சவரம்பு ரத்து..!

 

இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக உலக நாடுகள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக விமான நிறுவனங்கள் கடும் நிதிச்சுமையைச் சமாளிக்க வேண்டியுள்ளது.கடந்த டிசம்பர் மாதம் இண்டிகோ நிறுவனம் தனது பல்வேறு விமானச் சேவைகளை திடீரென மொத்தமாக ரத்து செய்தது. இதையடுத்து மற்ற விமான நிறுவனங்களின் உள்நாட்டு விமானக் கட்டணம் பன்மடங்கு அதிகரித்தது.இதைக் கட்டுப்படுத்த, டிசம்பரில் உள்நாட்டு விமானக் கட்டண உச்சவரம்பு அதிகரிப்பு உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளை விதித்தது மத்திய அரசு.உள்நாட்டு விமான சேவைக்கு அதிகபட்சம்,500 கிலோமீட்டர் வரை 7,500 ரூபாய் வரையும், ஆயிரம் கிலோ மீட்டர் வரை 12,000 ரூபாய் வரையும் வசூலிக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், விமானக் கட்டண உச்சவரம்பை ரத்து செய்து, மத்திய அரசு வெள்ளிக்கிழமை (மார்ச் 20) அறிவித்ததாக தகவல் வெளியானது.விமான சேவை சீரடைந்துள்ளதால், இந்த உச்சவரம்பு திங்கட்கிழமை முதல் நீக்கப்படுவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தது.கட்டணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டாலும், விமான நிறுவனங்கள் தன்னிச்சையாகக் கட்டணத்தை அளவுக்கு அதிகமாக உயர்த்தக் கூடாது என்றும் நியாயமான முறையில் கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
மத்திய கிழக்கில் நீடிக்கும் போர் காரணமாக விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ளதாகவும் நடைமுறைச் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்து வருவதாகவும் மத்திய விமான நிறுவனங்கள் தொடர்ந்து கூறி வருகின்றன.

இந்நிலையில், விமானக் கட்டண உச்சவரம்பு போன்ற கட்டுப்பாடுகள் பெரும் வருவாய் இழப்புகளை ஏற்படுத்துவதாகக் கூறிய அந்நிறுவனங்கள், உடனடியாக அவற்றை நீக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தின.

எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்பதை அந்நிறுவனங்கள் அறிவிக்கவில்லை என்ற போதிலும், எரிபொருள் செலவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், உள்நாட்டு விமானக் கட்டண உச்சவரம்பை திரும்பப் பெறுவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

கட்டணங்கள் நியாயமானதாகவும் வெளிப்படையானதாகவும் சந்தை நிலவரங்களுக்கு ஏற்றதாகவும் இருப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ள அரசு, பயணிகளின் நலன்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளுமாறும் விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.