தவெக-வினர் ஷாக் - அஜிதா ஆக்னல் திமுகவில் இணைந்தார்..!!
Apr 13, 2026, 09:47 IST
தூத்துக்குடியை சேர்ந்த அஜிதா ஆக்னல், தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய நிர்வாகியாக இருந்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தவெகவுக்காக தீவிர களப்பணியிலும் அவர் ஈடுபட்டு வந்தார்.
இந்த சூழலில், கடந்த ஆண்டு தவெகவுக்கு கட்சிப் பொறுப்பாளர்களை விஜய் நியமித்தார். அப்போது, தனக்கு தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும் என அஜிதா எதிர்பார்த்திருந்தார்.
ஆனால், கட்சி பொறுப்பாளர்கள் பட்டியலில் அஜிதாவின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் பனையூரில் உள்ள தவெக அலுவகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த அஜிதா, தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார்.
மேலும், அங்கு வந்த விஜய்யின் காரையும் அவர் மறித்து நின்றார். ஆனால், விஜய் அவரை கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அஜிதா, தற்கொலைக்கு முயன்றது அப்பொழுது பரபரப்பாக பேசப்பட்டது.
இதனிடையே, தமிழக வெற்றி கழகம் சார்பில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பளிக்குமாறு அஜிதா ஆக்னல் தொடர்ந்து கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு, விஜய்யின் கல்லூரி நண்பரான ஸ்ரீநாத்திற்கு வழங்கப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாகவே கட்சி தலைமை மீது அஜிதா கடும் அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், தூத்துக்குடி எம்.பி. கனிமொழியை நேற்று சந்தித்த அஜிதா ஆக்னல், அவரது முன்னிலையில் திமுகவில் இணைந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்களும் திமுகவில் இணைந்தனர்.
இதையடுத்து அங்கிருந்த செய்தியாளர்களை அஜிதா ஆக்னல் சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், "திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையை தற்போது திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளேன்.
தமிழக வெற்றிக் கழகத்தில் பெண்களுக்கு உரிய மரியாதை மற்றும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதன் காரணமாக திமுகவில் இணைந்திருக்கிறேன்" என அவர் தெரிவித்தார்.