இவர் தான் தமிழ்நாட்டின் முதல் அரசு பேருந்து திருநங்கை ஓட்டுநர்: தடைகளை உடைத்து வரலாற்று சாதனை..!
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் (TNSTC) முதல்முறையாக ஒரு திருநங்கை ஓட்டுநராக பணியில் இணைந்து சாதனை படைத்து வருகிறார் (ஸ்ரீதேவி).புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி வரை பேருந்தை இயக்கி வருகிறார் திருநங்கை ஸ்ரீதேவி. போக்குவரத்து நெரிசல் நிறைந்த மிகவும் பரபரப்பான திருச்சி ராமேஸ்வரம் சாலையில் தற்போது இவர் இந்த பேருந்தை இயக்கி வருகிறார்.
இந்த (திருநங்கை) தினசரி நூற்றுக்கணக்கான பயணிகளை பாதுகாப்பாக ஏற்றிச் சென்று தனது கடமையை அர்ப்பணிப்புடன் செய்து வருகிறார். மேலும் அரசு போக்குவரத்து துறையில் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது சமூகத்தில் திருநங்கைகளுக்கான சமத்துவத்தையும், அங்கீகாரத்தையும் உயர்த்தியுள்ளது.
பேருந்தை இயக்கும் இவருக்கு சக ஊழியர்களும், பொதுமக்களும், பயணிகளும் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக திருநங்கை கலையரசி நடத்துனராக சேர்ந்துள்ளார். தற்போது திருநங்கை ஸ்ரீதேவி ஓட்டுனராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி திருநங்கை ஸ்ரீதேவி கூறும் போது பயணிகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இதனை வரவேற்கின்றனர். ஒத்துழைப்பும் கொடுக்கின்றனர். இதுவரை ஆண்கள் மட்டும்தான் அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுனராக இருந்து வந்துள்ள நிலையில் தன்னை அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக நியமித்தது பெருமிதமாகவும் பெருமையாகவும் உள்ளதாகக் கூறியுள்ளார். எனக்கு இது மகிழ்ச்சியான வேலை. நான் இதை வெறும் வேலையாக நினைக்கவில்லை. இந்த வேலையை நான் மிகவும் விரும்பி காதலித்து செய்கின்றேன் என்று கூறியுள்ளார். அத்துடன் தான் தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக ஓட்டுனராகத் தான் பணிபுரிவதாகவும், தனக்கு நிரந்தரப் பணி வழங்கினால் தனக்கும் தன் குடும்பத்திற்கும், தான் சார்ந்த திருநங்கைகள் சமூகத்திற்கும் அரசு மிகப் பெரிய நம்பிக்கையை கொடுத்ததாக எண்ணுவோம் என்றும் கூறியுள்ளார்.
இவர் 2025 இல் தான் ட்ரெயினிங்கை முடித்ததாகவும், ஒரு வருட காலமாக பஸ் ஓட்டுவதாகவும், அதுவும் தற்காலிகமாக ஓட்டுவதாகவும் பணியை நிரந்தரமாக்கி கொடுத்தால் இந்த அரசுக்கு பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்வோம் என்றும் கூறியுள்ளார். திருநங்கைகள் என்றாலே யாசகம் கேட்க தான் செல்வார்கள் என்று எண்ணி இருந்தவர்கள் இப்பொழுது நான் இந்த வேலைக்கு வந்ததால் எல்லோரும் சந்தோஷப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.
இன்றைய நவீன காலகட்டத்தில் திருநங்கைகள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி கல்வி, வேலை வாய்ப்பு என அனைத்து துறைகளிலும் தங்களது திறமைகளை நிரூபித்து அசாத்திய சாதனைகளை புரிந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு திருநங்கை பேருந்து ஓட்டுனராக களம் இறங்கி இருப்பது ஒட்டுமொத்த சமூகத்தின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
பொதுவாகவே கனரக வாகனங்களை இயக்குவது சவாலானது என்ற நிலையை உடைத்து புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி வரை தினசரி அரசு பேருந்தை வெற்றிகரமாக இயக்கி வருகிறார். குறிப்பாக அதிக நெரிசல் நிறைந்த திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் எந்தவித பதட்டமும் இன்றி பேருந்தை இயக்கி வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
போக்குவரத்து துறையில் புதிய வரலாற்றுப் புரட்சியை ஏற்படுத்தியுள்ள ஓட்டுனர் ஸ்ரீதேவிக்கு அரசு உடனடியாக பணியை நிரந்தரமாக்கி கௌரவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது வலுவாக எழுந்து வருகிறது.