×

“எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து தவெகவில் சேர்ப்பது ஆரோக்கியமான அரசியல் அல்ல” - சண்முகம்

 

அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைவது ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல. எம்எல்ஏக்கள் இணைவதை தவெக ஊக்குவிப்பதாகவே கருத வேண்டிய நிலை ஏற்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூலம் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற சில சட்டமன்ற உறுப்பினர்கள் திடீரென்று ராஜினாமா செய்திருப்பதும், உடனடியாக அவர்கள் அனைவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்திருப்பதும் தமிழ்நாட்டில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவில் அடுக்கடுக்கான குழப்பமும், கோஷ்டி மோதலும் ஏற்பட்டு ராஜினாமா என்ற நிலைக்கு வந்துள்ளது. ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் சேர்ந்திருப்பது அவர்கள் விரும்பி மேற்கொண்ட முடிவு என்று சொன்னாலும், எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் இயல்பாக நடந்த செயலாக கருத இயலவில்லை. இத்தகைய போக்கு ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்றது அல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். ஏற்கனவே, சட்டப்பேரவையில் தவெக ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு அவர்கள் உள்ளாகி இருக்கிறார்கள். இருப்பினும் உடனடியாக அவர்களை தவெகவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதை தவெக ஊக்குவிப்பதாகவே கருத வேண்டிய நிலை ஏற்படும். எனவே, இந்த போக்கு ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் தமிழ்நாடு மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.