”சகலத்திற்கும் ஆதரவு அளிக்க முடியுமா?” - சண்முகம்
விரலில் மை காய்வதற்குள் ராஜினாமா செய்து மக்களுக்கு துரோகம் செய்த, தவெக வேட்பாளர்களுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது? என்பதை மக்களிடம் எடுத்துவைப்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம், “விரலில் மை காய்வதற்குள் ராஜினாமா செய்து மக்களுக்கு துரோகம் செய்த, தவெக வேட்பாளர்களுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது? என்பதை மக்களிடம் எடுத்துவைப்போம். அரசியல் உறவு என்பது அரசியல் காரணங்களுக்காக. எக்காரணத்தைக் கொண்டும் பாஜக தமிழகத்தில் வந்துவிடக் கூடாது என்பதற்காக உறவு வைத்திருந்தால் சகலத்திற்கும் ஆதரவு அளிப்பதாகவா அர்த்தம்? எங்கள் ஆதரவில் தான் தவெக ஆட்சி இருக்கிறது அதற்காக சகலத்திற்கும் ஆதரவா தெரிவிச்சுக்கிட்டு இருக்கோம்? அப்போதும் இப்போதும் ஒரே அணுகுமுறைதான். தவெக ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி வந்துவிட்டது.
சட்டமன்றத்தில் இடதுசாரிகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். நடந்து முடிந்த சட்டமன்ற தொடரில், இடதுசாரி எம்எல்ஏ.,க்களின் செயல்பாடுகள் எவ்வாறு இருந்தது என்பதை பார்த்த அனைவருக்கும் தெரியும். தவெகவிற்கு ஆட்சி அமைக்க இடதுசாரிகளின் ஆதரவு தொடர்கிறது. ஆதரவு தெரிவித்தாலும், தவெக ஆட்சியில் பல விசயங்களுக்கு நாங்கள் உடன்படவில்லை. அந்த அணுகுமுறை எதிர்காலத்திலும் தொடரும்” என்றார்.