×

“முதலமைச்சரே சிரமங்களை விளக்கினார்... சிபிஎம்க்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு”- சண்முகம்

 

அதிக கட்சிகள் இருப்பதால் 5 தொகுதிகளை ஏற்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம், “6 தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், முதலமைச்சர் மு. க ஸ்டாலின் 5 தொகுதிகள் ஒதுக்குவதாகத் தெரிவித்திருக்கிறார். கொள்கைப் பூர்வமாக தீர்மானத்தின் அடிப்படையில் திமுக அணியில் நாங்கள் நீடிக்கிறோம். எத்தனை தொகுதிகள் கொடுக்கிறார்கள்? என்பதை பொறுத்து இந்த அணியில் நீடிக்கலாமா வேண்டாமா? என்று முடிவு செய்வதல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அதிக கட்சிகள் இருப்பதால் 5 தொகுதிகளை ஏற்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். முதலமைச்சரே சிரமங்களை விளக்கி வேண்டுகோள் விடுத்திருப்பதால் இதுகுறித்து மாநில செயற்குழுவில் நிர்வாகிகளுடன் பேசி முடிவு எடுக்கப்படும். இன்று மாலையோ, நாளையோ செயற்குழு ஆலோசிக்கும். தொகுதி பங்கீட்டில் எந்த குழப்பமும் இல்லை. எண்ணிக்கைக்காக கூட்டணியைவிட்டு செல்லமாட்டோம்” என்றார்.