மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கைது!
கடலூர் அருகே தடையை மீறி முந்திரி கன்றுகள் நடும் போராட்டத்தில் கலந்துகொள்ள சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம் மலை அடி குப்பம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தில் முந்திரி கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் அந்த முந்திரி மரங்கள் அகற்றப்பட்டது. இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முந்திரி கன்றுகள் நடும் போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்தனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலை அடி குப்பம் கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்க சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கைது செய்யப்பட்டார். மலைஅடிகுப்பம் கிராமத்திற்கு தடையை மீறி முந்திரி கன்றுகள் நடும் விழாவிற்கு சென்ற சண்முகம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்களை போலீசார் தடுத்தி நிறுத்தி கைது செய்தனர்.