×

குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை- நாகையில் அதிர்ச்சி

 

நாகையில் தனியார் குழந்தைகள் காப்பகத்தில் இருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காப்பக நிறுவனர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். 

நாகப்பட்டினம் புதிய கடற்கரை சாலையில் "நம்பிக்கை" என்ற பெயரில் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டுவருகிறது. இந்த காப்பகத்தை காரைக்கால் ஓ.என்.ஜி.சி உற்பத்தி பிரிவில் பணியாற்றி வரும் பரமேஸ்வரன் மற்றும் அவரது மனைவி சூடாமணி ஆகியோர் நடத்தி வருகின்றனர். இந்த  காப்பகத்தில் பொருளாதரத்தில் நலிவுற்ற, தாய், தந்தை இழந்த 18 வயதுக்கு உட்பட்ட 15 பெண் குழந்தைகள், 15 ஆண் குழந்தைகள் தங்கி இருந்தனர். 

இந்நிலையில் அந்த காப்பகத்தில் தங்கி 9 ம் வகுப்பு படிக்கும் மாணவி நம்பிக்கை குழந்தைகள் காப்பகத்தின் நிறுவனர் பரமேஸ்வரன் , தன்னிடமும் காப்பகத்தில் உள்ள சிறுமிகளிடம் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாகவும், தனி அறைக்கு அழைத்து சென்று பாலியல் அத்து மீறலில் ஈடுப்பட்டதாகவும் நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  

புகாரின்பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பரமேஸ்வரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனை அறிந்த காப்பக நிறுவனர் பரமேஸ்வரன்  குழந்தைகள் காப்பகத்தில் இருந்த தனது வீட்டில் இருந்து குடும்பத்துடன் தலைமறைவானார். தலைமறைவாக இருந்த பரமேஸ்வரனை தேடி வந்தனர். 

இந்த நிலையில் துணை ஆட்சியர்  தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் நம்பிக்கை குழந்தைகள் காப்பகத்திற்கு சென்று அங்குள்ள சிறுமிகளிடம்  விசாரணை மேற்கொண்டதில் பரமேஸ்வரன் சிறுமிகளிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுப்பட்டது உறுதிபடுத்தப்பட்டது. மேலும் காப்பகத்திற்கு பணம் பெறுவதற்காக சிறுமிகளை பலிகடாக்கியதாவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து காப்பகத்தில் இருந்த குழந்தைகளை அரசு காப்பகங்களுக்கு மாற்றிய அதிகாரிகள், நம்பிக்கை குழந்தைகள் காப்பகத்தில் சோதனை நடத்தி காப்பகத்தை இழுத்து மூடினர். இதையடுத்து தலைமறைவான  பரமேஸ்வனை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு தேடும் பணி நடைபெற்றுவந்தது. இந்நிலையில் நாகை அருகே உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த பரமேஸ்வரனை தனிப்படை போலீசார் கைது செய்து நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.