×

​சிறுமிக்கு பாலியல் தொல்லை - புகார் அளிக்கச் சென்றவரை அலைக்கழித்த காவல்துறை 

 

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே 7-ஆம் வகுப்பு மாணவிக்கு இழைக்கப்பட்ட பாலியல் தொல்லை மற்றும் அது தொடர்பாகப் புகார் அளிக்கச் சென்றபோது கீழக்கரை அனைத்து மகளிர் காவல் துறை நீண்ட நேரம் காக்க வைத்து இருந்தனர்.

​சாயல்குடி பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமியிடம், அதே பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ரவி என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்துப் புகார் அளிக்கச் சென்ற சிறுமியையும் அவரது தாயாரையும், சாயல்குடி போலீஸார் கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட தரப்பினர் கீழக்கரை மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்றபோது, அங்கும் முறையான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.  காவல் நிலையம் சென்றும், ஆய்வாளர் இல்லை என்ற காரணத்தைக் கூறி வழக்குப்பதிவு செய்யாமல் சார்பு ஆய்வாளர் காலம் தாழ்த்தியதாகப் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் வேதனை தெரிவித்துள்ளார்.

​ஏற்கனவே விளாத்திகுளம் பகுதியில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த வழக்கில், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அதே பகுதியில் மீண்டும் ஒரு பாலியல் அநீதி அரங்கேறியிருப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடனடி நீதி வழங்கப்பட வேண்டும் என்றும், புகாரைப் பதிவு செய்யத் தவறிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.