×

விபத்தில் சிக்கியவர்களுக்கு உறுப்பு பாதிப்பு சான்றிதழ் வழங்க தனி வார்டு! 

 

சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சி.ஜெகதீசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "வாகன விபத்தில் சிக்கியதால் இழப்பீடு கோரி விபத்து வழக்குகளுக்கான தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்குக்காக, மருத்துவ வாரியத்தின் உடல் உறுப்பு பாதிப்பு சான்றிதழ் பெறுவதற்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் நரம்பியல் பிரிவில் 30 நாட்கள் அனுமதிக்கப்பட்டேன். பிறகு 40 சதவீத பாதிப்பு இருப்பதாக சான்றிதழ் அளிக்கப்பட்டது. 

என்னைப் போல பலரும் இந்த சான்றிதழ் பெறுவதற்காக அரசு மருத்துவமனையில் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே, இதற்கு தனி வார்டு அமைக்கவும், சான்றுவழங்க காலக்கெடு நிர்ணயிக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார். நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இந்த வழக்கு விசாரணை நடந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி.எஸ்.சுரேஷ் ஆஜரானார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆர்.கோவிந்தசாமி ஆஜராகி, ‘‘இதுபற்றி சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்’’ என்றார்.

இதையடுத்து நீதிபதி, ‘‘மனுதாரர் தான் பாதிக்கப்பட்டதுபோல வேறு யாரும் பாதிக்கப்படக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் வழக்கை தொடர்ந்துள்ளார். எனவே, வாகன விபத்துகளில் சிக்குவோரின் மன வேதனையைப் போக்கும் வகையில் உடல் உறுப்பு பாதிப்பு சான்று பெற வருபவர்களுக்கு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தனி வார்டு அமைப்பது குறித்து அரசு 4 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.