×

நெடுஞ்சாலைத் துறைக்கு தனி ஆணையம்.. ஓரிரு நாட்களில் அறிவிப்பு - அமைச்சர் எ.வ.வேலு தகவல்..

 

நெடுஞ்சாலை துறைக்கென தனி ஆணையம் தொடர்பான அறிவிப்பை இன்னும் ஓரிரு தினங்களில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என  அமைச்சர் எ.வ. வேலு கூறியுள்ளார்.

நெடுஞ்சாலைத்துறையை சீரமைப்புச்  செய்தல் மற்றும் பாலங்கள் சிறப்பு ஆய்வு அலகு உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளுக்கு ஆணை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் நடைபெற்றது.  இதில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு உரையாற்றினார.   அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் பல துறைகள் அரசில் இருந்தாலும்,  முதல்வரது நெஞ்சுக்கு நெருக்கமாக இருப்பது நெடுஞ்சாலைத் துறை.  

சாலை மற்றும் பாலம் கட்டுமானதிற்கு நிலையான விவர குறிப்பு தமிழகத்தில் தான் எழுதபட்டது .  அதுவே இன்று இந்திய அளவில் வழிகாட்டியாக உள்ளது . மருத்துவர்கள், ஓய்வின்றி பணியாற்றி கொண்டு இருக்கிறார்கள் என்றால் அந்த நாட்டில் நோய் அதிகம் உள்ளது என பொருள்.  ஆனால் பொறியாளர்கள் ஓய்வின்றி உழைத்து கொண்டு இருக்கிறார்கள் என்றால் அந்த நாடு, வளர்ச்சி பாதையில் உள்ளது என பொருள். 

நெடுஞ்சாலை துறைக்கு அரசு செய்யும் செலவு, அரசுக்கு வருவாய் ஈட்டும் மூலதன செலவு.  சாலை மேம்பாட்டுத் திட்டம் எனும் அற்புதமான திட்டத்தின் தாக்கத்தால் தான், நெடுஞ்சாலை துறைக்கு தனி ஆணையம் அமைக்கபடும் என்கிற அறிவிப்பை சட்டமன்றத்தில் அறிவித்தோம்.  இன்னும் ஒரு சில தினங்களில் அதற்கான ஆணையை தமிழக முதலமைச்சர் வெளியிட உள்ளார்” என்று தெரிவித்தார்.