×

செந்தில் பாலாஜி மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்.. இன்று பிற்பகலில் விசாரணை..?

 

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி  சென்னை உயர் நீதிமன்றத்தில்   மனுத்தாக்கல் செய்துள்ளார்.    இன்று பிற்பகலிலேயே இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு, அரசு இல்லம், தலைமை செயலகத்தில் உள்ள அலுவலகம், சகோதரர் வீடு, பெற்றோர் வீடு என 10 இடங்களில் நேற்று (ஜூன் 13) காலை 8 மணி அளவில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடியாக  சோதனையைத் தொடங்கினர். நள்ளிரவு வரை சுமார் 18 மணி நேரம் வரை நீடித்த சோதனையின் முடிவில், அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர்.  ஆனால், இது தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரபூர்வமாக எந்த தகவலும் இதுவரை தெரிவிக்கவில்லை. இதனிடையே நள்ளிரவில் கைது செய்யப்பட இருந்தபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.  

இதனைத் தொடர்ந்து அவர் சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ செய்து பார்த்ததில்  ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பதாகவும், பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முறையீடுட்டுள்ளார்.  நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் ஆர்.சக்திவேல் அடங்கிய அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, அவரது தரப்பில்  ஆஜராகி முறையீடு செய்தார்.

அப்போது அவர்,  அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாகவும், கைதுக்கு முன்பான விசாரணை என்கிற நடைமுறையை பின்பற்றப்படவில்லை என்றும்  தெரிவித்துள்ளார். இதனைக்கேட்ட நீதிபதிகள், மனு தாக்கல் நடைமுறைகள் முடிந்த பிறகு நீதிமன்றத்தில் முறையிடும்படி அறிவுறுத்தியதாகவும், மேலும், மனுத்தாக்கல் நடைமுறைகள் நிறைவடைந்தால்  பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.