திருவல்லிக்கேணி காவல்துறைக்கு செந்தில் பாலாஜி கடிதம்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி தவெக எம்.எல்.ஏ டாக்டர் என். இளையராஜாவை சென்னையில் தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனம் நடத்திய வரும் திருநாவுக்கரசு என்பவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தின் வாக்கெடுப்பின்போது தாங்கள் கூறும் வகையில் செயல்பட்டால் ரூபாய் 35 கோடி வழங்கப்படும் என பேரம் பேசியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்த எம்.எல்.ஏவுக்கு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில், திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இதுவரை 12 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
விசாரணையின் போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கைது செய்யப்பட்ட சிலர் கூறியுள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் இருவரும் கடந்த வாரம் திங்கட்கிழமை (ஜூலை 5) காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென போலீசார் தரப்பில் சம்மன் வழங்கப்பட்ட நிலையிலும், அவர்கள் இருவரும் ஆஜராகாமல் முன் பிணை கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜிக்கும் அவரது சகோதரருக்கும் காலை, மாலை இரு வேளையும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிமன்றம் முன் பிணை வழங்கியது. ஆனால் இருவரும் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. இதனால் காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என முறையிட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் கடிதம் ஒன்று வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், வழக்கு பதிவில் எனது பெயரும், எனது சகோதரர் அசோக் குமார் பெயரும் இடம்பெறவில்லை.
தவெக பேரம் பேசிய வழக்கில் நீதிமன்றம் நிபந்தனையுடன் முன் பிணை இருந்தது. அதாவது காலை 10 மணி மற்றும் மாலை 5 மணி காவல்துறை அலுவலகத்தில் கையெழுத்து போட வேண்டும். மேலும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தற்பொழுது தவெக பேரம் பேசிய வழக்கு பதிவில் பெயர் இல்லாதபோது இந்த வழக்கில் விசாரணைக்கு எப்படி ஆஜராக முடியும்? மேலும் நான் இந்த வழக்கில் ஆஜராகும் பட்சத்தில் வேறு எந்த வழக்கிலும் என்னை கைது செய்யக்கூடாது. நான் மக்கள் பிரதிநிதி. அதுமட்டுமல்ல, பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்திவரும் தொழிலதிபர். நான் எங்கும் ஓடி ஒளியவில்லை.
அப்படி ஆஜராகும் பட்சத்தில் எனக்கு 35 (3) BNS என்ற பிரிவின் கீழ் நோட்டீஸ் வழங்க வேண்டும். திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் மருத்துவ வசதி இருக்க வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.