×

பழுதடைந்த 4,000 தெருவிளக்குகள் ஒரே வாரத்தில் சீர் செய்யப்பட்டது- அமைச்சர் செந்தில்பாலாஜி

 

கோவைக்கு தேவையான உட்கட்டமைப்பு இதுவரை சரி செய்யப்படாமல் இருப்பதாகவும், அவை விரைவில் சரி செய்யப்படும் என்றும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் மக்கள் சபை என்ற பெயரில் மக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற்று அதற்கு தீர்வு காணும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று கோவை மசக்காளிபாளையம் உட்பட 12 இடங்களில் பொது மக்களிடம் மனுக்களை பெறும் நிகழ்வில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரடியாக மக்களை சந்தித்து மனுக்களை பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “கோவை மாநகராட்சியில்  பழுதடைந்த சாலைகளை சரி செய்ய  திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அனுப்பபட்டுள்ளது,  சாலைகள் முழுமையாக சீரமைக்கப்படும். கோவை மாவட்டத்தில் 150 இடங்களில் மனுக்களை பெற திட்டமிட்டுள்ளோம். இதுவரை 88 மையங்களில் 64,000 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. 25,000 மனுக்கள் வரும் என எதிர்பார்த்த நிலையில் அதை விட அதிகமாக மக்களிடம் இருந்து மனுக்கள் வருகின்றது.

கடந்த ஆட்சியில் மக்கள் பிரச்சினைகள் எந்த அளவு தீர்வு காணப்பட்டுள்ளது என்பதற்கு இந்த மனுக்கள் ஒரு உதாரணம். ஒரே பகுதியில் 3,700 மனுக்கள் வரை வாங்கி இருக்கிறோம், 12 நாட்களுக்கு ஓரு முறை தண்ணீர் வருவதாகவும், சாலை வசதி மேம்படுத்த வேண்டும் எனவும் அதிக மனுக்கள் வந்துள்ளது. விரைவில் இதற்கான தீர்வுகள் கொண்டு வரப்படும். முதல் முறையாக கோவையில் ஆலோசனை கூட்டத்தின் போது பழுதடைந்துள்ள 5 ஆயிரம் தெரு விளக்குகள் ஒரு வாரத்திற்குள் சீர் செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி, தற்போது 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவைக்கு தேவையான உட்கட்டமைப்பு இது வரை சரி செய்யப்படாமல்  இருக்கின்றது. அதுவும்  சரி செய்யப்படும்” எனக் கூறினார்.