"கரூர்ல வண்டி மேல நின்னு பாட்டெல்லாம் பாடுனீங்க.. இப்ப வசனம் பேசிட்டு இருக்கீங்க"- செந்தில் பாலாஜி
அந்தந்த துறையின் அமைச்சர்கள் அந்த துறையின் ஆய்வு கூட்டங்களை நடத்தி எப்படி எடுத்து செல்லலாம் என்பதில் கவனம் செலுத்தவில்லை என முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, “திரையில், திரைப்படங்களில் வசனங்கள் பேசலாம், முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பும் செய்ய வேண்டிய பணிகளை மறந்து வசனங்களை பேசிக்கொண்டிருக்கிறார் விஜய். புதிய அரசை பொறுத்தவரை திட்டங்களை நிறைவேற்றுவதை விட்டுவிட்டு வசனங்களை பேசிக் கொண்டிருக்கிறார்கள். அரசு செய்யத் தவறிய கடமைகளை சுட்டிக்காட்டுவதுதான் எதிர்க்கட்சியின் கடமை. வேடிக்கை பார்ப்பது அல்ல, தற்போது பொறுப்பேற்றுள்ள தவெக அரசு திமுக மீது குற்றம் சொல்வதிலேயே குறியாக இருக்கிறார்கள். மக்களுக்கு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தவில்லை. அந்தந்த துறையின் அமைச்சர்கள் அந்த துறையின் ஆய்வு கூட்டங்களை நடத்தி எப்படி எடுத்து செல்லலாம் என்பதில் கவனம் செலுத்தவில்லை.
கரூருக்கு வந்து எவ்வளவு கீழ்த்தரமாக பேசினார்கள். வண்டி மேல் ஏறி பாட்டெல்லாம் பாடினார்கள். டாஸ்மாக் விவகாரத்தில் அப்போது நாங்கள் கொடுத்த விளக்கங்களை எல்லாம் ஏற்காமல் ஓட்டுக்காக அவதூறு பரப்பினார்கள். இப்போது டாஸ்மாக் விவகாரத்தில் எதை கட்டுப்படுத்தி விட்டார்கள்? அந்த துறை அமைச்சர் விளக்கம்தானே கொடுத்துக் கொண்டிருக்கிறார்? எதை நிறுத்திவிட்டார்கள்? இதைத்தான் சோஷியல் மீடியாவில் மக்கள் கேட்கிறார்கள்” என்றார்.