×

“30 வருடமாக அரசியலில் உள்ளேன்... தேர்தல் முடியும் வரை சட்டத்தை யாரும் கையில் எடுக்கக்கூடாது”- செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி

 

கோவையில் அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ.1 லட்சம் கோடி மதிப்பீட்டிலான திட்டங்களை செயல்படுத்த உள்ள  வரைவு திட்ட அறிக்கையை திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வெளியிட்டார். 


கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர். “முதலமைச்சர் ஸ்டாலின் வேட்பாளராக அறிவித்த பின்னர், தொழில்துறையினர், பொதுமக்கள் என பல தரப்பட்ட மக்களையும் பார்த்திருக்கிறோம். திமுக 2.0 அமைந்தவுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசித்தோம். ஒரு லட்சம் கோடியில் கோவை மாவட்டத்திற்கு அடுத்த 5 ஆண்டுக்களில் மேற்கொள்ளப்படும் திட்டம் குறித்த வரைவு திட்டம் வெளியிடுகிறோம். தொழில்துறை விரிவாக்கம்த்திற்காக 50 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் புதிய தொழிற்சாலைகளை உருவாக்குதல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும். மீதமுள்ள 50 ஆயிரம் கோடியில் உள்ளாட்சிகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்த திட்டம் செயல்படுத்தப்படும். மாவட்ட அளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4ம் இடத்தில் தொழில்துறையில் கோவை உள்ளது. அடுத்த 7 முதல் 10 ஆண்டுகளில், கோவையில் 15 சதவீதமாக உள்நாட்டு உறுபத்தியை பெருக்க திட்டமிடப்படும். ஜவுளித்துறையில் புதிய முதலீடுகள், சிறு, குறு தொழில்துறையை மேம்படுத்த உற்பத்தி பொருட்கள் தயாரிப்பு திட்டம், தகவல் தொழில்நுட்ப தலைநகராக மாற்ற முயற்சி, சேவை உள்கட்டமைப்பு மேம்பாடு, கார்பன் அடர்த்தியை குறைக்க பசுமை திட்டங்கள், சுற்றுச்சூழல் மேம்பாட்டின் ஒரு பகுதியாக நொய்யல் ஆற்றை மேம்படுத்துதல், மேம்பட்ட நோயறிதல் மற்றும் ஆராய்ச்சி வசதிகள் செய்தல், ஆபரண உற்பத்தி மற்றும் சில்லரை வர்த்தக மையம் உள்ளிட்ட 11 திட்டங்கள் மூலம் அடுத்த 7 முதல் 10 ஆண்டுகளில் கோவையை தமிழகத்தில் முதலிடத்திற்கு மேம்படுத்த திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. நீர் பாதுகாப்பு மற்றும் மறுசுழற்ச்சி திட்டங்கள், மின் துறைக்கு தேவையான திட்டங்கள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்பாடு, டிகே மார்க்கெட்டில் கார் பார்க்கிங். மொத்தம் 15 திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். ஆழியாறு நல்லாறு திட்டத்தை செயல்படுத்த கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டம். ஒருங்கிணைந்த ஒரு புறநகர் பேருந்து நிலையம் அமைக்க முயற்சிப்போம். கிழக்கு புறநகர்ச்சாலைப்பணிகளை விரைந்து முடிக்க திட்டம். தற்போதைக்கு மொத்தம் 26 திட்டங்களை முன்மொழிந்துள்ளோம். இன்னும் தேவையான திட்டங்களை செயல்படுத்துவோம்.

இதற்கு முன்னர் இருந்தவர்கள் இதைப்போன்ற ஒரு திட்டத்தை இதுவரை முன்மொழிந்திருக்க மாட்டார்கள். கோவையில் விரைவாக புறநகர் பேருந்து நிலையத்தை அமைக்க இடம் தேர்வு செய்யும் பணிகள் துவக்குவோம். வெள்ளலூர் குப்பைக்கிடங்கு தொடர்பாக அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்து அடுத்தகட்ட முயற்சிகளுக்கான பணிகள் தீவிரப்படுத்தப்படும். நொய்யல் ஆற்றை சீரமைக்கும் பணிகள் நிச்சயம் மேற்கொள்ளப்படும்.  தேர்தலில் தோல்வி பயம் காரணமாக எதிர்க்கட்சிகள் பிரச்சனையை உருவாக்கி வருகின்றனர். கோவையில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு வெளிமாநில முதலமைச்சர்களும் வந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தோல்வி என்பதை உணர்ந்த அதிமுக வேட்பாளர் பேசிவருகிறார். தோற்கப்போகிறவர்கள் இது போன்று பிரச்சனைகளை முன்னெடுக்கிறார்கள். அதிமுகவினர் என்ன கொடுத்துள்ளார்கள் என்பதை சொன்னால் அரசியல் நாகரீகமாக இருக்காது. வாட்ச் பில் கேட்டால் அண்ணாமலை துண்டு சீட்டை கொடுத்தவர். இன்று பல கோடி ரூபாய் வருமானம் உள்ளவருக்கு எப்படி இந்த பணம் வந்தது. உரக்கப்பேசினால் உண்மையாகிவிடும் என நினைக்கிறார். சுமார் 30 ஆண்டுகளாக நான் அரசியலில் இருக்கிறேன். சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளில் 21 ஆயிரம் கோடி ரூபாயை கோவைக்கு கொடுத்த ஒரே அரசு திமுக அரசு. இதுவரை யாரும் கொடுக்கவில்லை. 

நான் கோவையில் இருக்கிறேன். எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் இருக்கிறார். வேண்டுமானால் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு வாங்கிக்கொள்ளட்டும். நான் எப்படி அவருக்கு தீங்கு ஏற்படுத்த முடியும்? தேர்தலின் போது, மத்திய, மாநில அரசு ஊழியர்களாக இருந்தாலும், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். அப்படியிருக்க எப்படி வாக்குச்சாவடிகளை கைப்பற்ற முடியும்? தேர்தலுக்கு பணம் வாங்குவதும், கொடுப்பதும் இரண்டுமே தவறு. பணம் கொடுப்பதாக ஆதாரங்கள் இருந்தால் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வேண்டும்.  ஒரு எதிர்க்கட்சி தலைவர் தேர்தல் காலத்தில் பேசக்கூடிய வார்த்தைகளுக்கு ஒரு எல்லை உண்டு. ஆனால் பல்வேறு விமர்சனங்களை அவர் வைத்து வருகிறார். தேர்தல் காலத்தில் இப்படி பேசுவது, தோல்வி பயத்தால் கூறக்கூடியது. திமுகவினர் என்று கூறினாலே அடிக்கிறார்கள் என்றால் யார் தேர்தலை சீர்குலைக்க முயல்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். தேர்தல் முடியும் வரை சட்டத்தை யாரும் கையில் எடுக்கக்கூடாது.” என்றார்.