×

செந்தில் பாலாஜி வழக்கு : 3வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரிப்பார் என தலைமை நீதிபதி உத்தரவு.. 

 

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் மூன்றாவது நீதிபதியாக சி.வி. கார்த்திகேயனை நியமித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  தற்போது அவர்  இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டவுடன் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தக் கோரி,  அவரது மனைவி மேகலா உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு  தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனு நீதிபதிகள் ஜெ நிஷா பானு சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். முதலில் தீர்ப்பை வாசித்த நீதிபதி நிஷா பானு, செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதும்,  நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டதும் சட்டவிரோதம் என்றும், அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார். அவரை தொடர்ந்து நீதிபதி பரத சக்கரவர்த்தி தனது தீர்ப்பில் சிகிச்சை முடிந்து குணம் அடைந்த பின்னர் செந்தில் பாலாஜியை சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

சென்னை உயர்நீதிமன்ற  இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்திருப்பதால் மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்காக தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதியாக சி.வி. கார்த்திகேயனை நியமித்து தலைமை நீதிபதி கங்காபூர்வாலா உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதி வழங்கும் தீர்ப்பை இறுதியானது என்பதால், இந்த விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.