×

தமிழக அரசியலில் பரபரப்பு..! தவெக நிர்வாகியை பிடித்து தர்மஅடி கொடுத்த உறவினர்கள்!

 

தமிழகத்தில் அண்மைக்காலமாக தவெகவின் அடிமட்ட மற்றும் மாவட்ட அளவிலான சில நிர்வாகிகள் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் எழுந்து வரும் நிலையில், கரூரில் அரங்கேறியுள்ள இந்தத் தர்மஅடி விவகாரம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

போலீஸ் தரப்பில் இருந்து கசிந்துள்ள முதற்கட்ட தகவல்களின்படி, குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் தவெகவின் தீவிரத் தொண்டராகவும், உள்ளூர் கட்சிப் பொறுப்பிலும் இருந்து வந்த நபர் ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான இளம் பெண் ஒருவரிடம் கடந்த சில வாரங்களாக அலைபேசி மூலமாகவும், நேரிடையாகவும் அத்துமீறி நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண் பலமுறை எச்சரித்தும், தனது அரசியல் செல்வாக்கைக் காட்டி மிரட்டிய அந்த நிர்வாகி, மீண்டும் அப்பெண்ணிற்குப் பாலியல் ரீதியான தொல்லைகளைக் கொடுத்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண், இக்கொடூரச் சம்பவம் குறித்துத் தனது கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் அழுதுகொண்டே விவரித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அந்த தவெக நிர்வாகியைப் பொறிவைத்துப் பிடிக்கத் திட்டமிட்ட பெண்ணின் உறவினர்கள், அப்பெண்ணைக் கொண்டு தந்திரமாக அவரை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்துள்ளனர். அங்கு எவ்வித அச்சமும் இன்றி அத்துமீற முயன்ற அந்த தவெக நிர்வாகியை, மறைந்திருந்த உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்துக் காரசாரமாக விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அவருக்கு நடுரோட்டில் வளுவான அடி உதை கொடுத்து (தர்மஅடி) தங்களது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குளித்தலை காவல் துறையினர், காயமடைந்த அந்த நிர்வாகியைப் பொதுமக்களிடம் இருந்து மீட்டு விசாரணைக்காகக் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் முறைப்படியான புகாரைப் பெற்றுக்கொண்டு, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் போலீஸார் ஆயத்தமாகி வருகின்றனர். இதற்கிடையே, தவறு செய்தவர் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும், கட்சிப் பெயரைக் கெடுக்கும் நபர்கள் மீது தவெக தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என்றும் உள்ளூர் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.