☰
×

தமிழக அரசியலில் பரபரப்பு..!! மரகதம் குமரவேல் பிரமாணப் பத்திரத்தில் சர்ச்சை..!!

 

தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் (Affidavit) வயது மற்றும் வருமான விவரங்களில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்காக கடந்த ஏப்ரலில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் 5 ஆண்டுகளுக்கானவருமானம் ரூ.1.8 கோடி என குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது இடைத்தேர்தலுக்காக தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் ரூ.40 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 2023-24 வருமானமும் ரூ.12.57 லட்சத்தில் இருந்து ரூ.4.12 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்திற்கு கோவை காங்கிரஸ் நிர்வாகி பிரபு புகார் அனுப்பியுள்ளார். அந்த மனுவில், "மரகதம் குமரவேல் கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு தன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார்.

இடைத்தேர்தலில் அவர் தவெக வேட்பாளராக போட்டியிடுகிறார். கடந்த பொதுத்தேர்தலின் போது அவர் தாக்கல் செய்த படிவம் 26 பிரமாணப் பத்திரத்திற்கும், தற்போது இடைத்தேர்தலுக்காக சமர்ப்பித்துள்ள பத்திரத்திற்கும் இடையே முரண்பாடுகள் உள்ளன. பொதுத்தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தனது வயது 44 என்று குறிப்பிட்டிருந்த வேட்பாளர் மரகதம், சில மாதங்களிலேயே தாக்கல் செய்த புதிய பத்திரத்தில் தனது வயதை 43 எனக் குறைத்து காட்டியுள்ளார்.

மேலும், வேட்பாளர் மற்றும் அவரது கணவரின் வருமான வரிக் கணக்கு விவரங்களில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பெரும் முரண்பாடுகள் காணப்படுகின்றன. முந்தைய பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த 2025-26 நிதியாண்டுக்கான வருமான விவரங்கள் தற்போதைய மனுவில் முற்றிலுமாக விடுபட்டுள்ளது. முந்தைய பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த வங்கிக் கணக்கு விவரங்கள் தற்போது விடுபட்டுள்ளன. வேட்பாளரின் கணவருக்கு கரூர் வைஸ்யா வங்கியில் இருந்த ரூ.19 லட்சம் கடன் விவரங்களை கூறாமல் மறைத்துள்ளனர்.

இப்படி பல தகவல்களை திட்டமிட்டு மறைத்து, 11 வகையான விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவிற்கு இன்னும் இண்டு நாட்களே எஞ்சியுள்ளது. தேர்தல் அதிகாரிகள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு உண்மை நிலையை ஆய்வு செய்ய வேண்டும். தகவல்களைத் தெரிந்தே மறைத்ததற்காக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 125A-இன் கீழ் வேட்பாளர் மீது சட்டப்படி கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். கூட்டணியில் இருந்து கொண்டே தங்கள் வேட்பாளர் மீது புகார் கூறிய, காங்கிரஸ் மீது தவெகவினர் கடுப்பில் உள்ளனர்.