☰
×

கண்ணூரில் பரபரப்பு! அசுர வேகத்தில் வந்த ரயில்... தண்டவாளத்தில் சிக்கிய ஜீப்

 

கேரள மாநிலம் கண்ணூர் தாழே சொவ்வா (Thazhe Chovva) பகுதியிலுள்ள ரயில்வே கேட் மூடப்படும்போது, சாலையைக் கடக்க முயன்ற ஜீப் ஒன்று எதிர்பாராதவிதமாக ரயில்வே தண்டவாளத்தில் சிக்கியது. இந்தச் சம்பவம் காலை 10 மணியளவில் நடைபெற்றது.

தண்டவாளத்தில் ஜீப் சிக்கியதால், அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் ரயில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.சம்பவம் நடந்த சமயத்தில் கோழிக்கோடு பகுதியிலிருந்து வந்துகொண்டிருந்த ரயில், அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் ரயில்வே கேட் அருகிலேயே முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டது.தண்டவாளத்தில் மாட்டிக்கொண்ட ஜீப் வாகனம், பின்னர் கிரேன் உதவியுடன் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டது.

ரயில்வே கேட் மூடப்படும் தருணங்களில் பெரும்பாலான வாகனங்கள் அவசரமாகச் சாலையைக் கடக்க முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்திலும், முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோதே ஜீப் தண்டவாளத்தில் மாட்டிக்கொண்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.