×

சென்னையில் பரபரப்பு..! தலைமை செயலகம் அருகே ரசாயன கசிவு; பொதுமக்கள் பாதிப்பு..! 

 

 தலைமைச் செயலகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 11.30 மணியளவில் திடீர் புகைமூட்டம் நிலவியது. நச்சுவாயு கலந்த புகையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.

வாகன ஓட்டிகள் முகத்தை துணியால் மூடியபடியும், கார் கண்ணாடிகளை திறக்காமலும் அப்பகுதியை கடந்து சென்றனர். இதற்கிடையே, துறைமுகப் பகுதியில் ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டிருந்த சல்பர் குவியலில் இருந்து ரசாயன கசிவு ஏற்பட்டதே புகைமூட்டம் ஏற்பட காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தீ விபத்து எதுவும் இல்லை என்றும், வெப்பத்தின் தாக்கத்தால் சல்பர் குவியலில் இருந்து ரசாயன கசிவு ஏற்பட்டதாகவும் சென்னை துறைமுகம் விளக்கம் அளித்துள்ளது.

அத்துடன் தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இந்நிலையில், இந்த வாயுக்கசிவின் தீவிரம் மற்றும் அதனால் காற்றில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்டறியும் நோக்கில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிநவீன நடமாடும் சுற்றுச்சூழல் ஆய்வக வாகனங்கள் (Mobile Environmental Laboratory Vehicles) சென்னை துறைமுக வளாகத்திற்குள் வரவழைக்கப்பட்டன.பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நலனை கருத்தில் கொண்டு, வாயு கசிவு கண்டறியப்பட்ட குறிப்பிட்ட பகுதிகளில் இந்த சிறப்பு வாகனங்கள் மூலம் 24 மணி நேரமும் தங்குதடையின்றி காற்றின் தரத்தைத் தீவிரமாகக் கண்காணிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். காற்றில் கலந்துள்ள வாயுவின் தன்மை, அதன் அடர்த்தி மற்றும் நச்சுத்தன்மை ஆகியவற்றை உடனுக்குடன் ஆய்வு செய்து, பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கான அவசரக்கால நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.