திமுக மூத்த தலைவர் பொன்முடிக்கு மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பு..!
தி.மு.க தலைமைக் கழகம் கட்சியின் மூத்த தலைவர் பொன்முடியை துணைப் பொதுச் செயலாளராக நியமித்துள்ளது. அதே போல, அமைச்சர் மு.பெ. சாமிநாதனையும் துணைப் பொதுச் செயலாளராக நியமித்துள்ளது.
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் பொன்முடி, கடந்த ஏப்ரல் மாதம் விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பொன்முடி, பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் சமய நம்பிக்கைகளை அவமதிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பெண்களுக்கான இலவச பேருந்து, குறிப்பிட்ட சாதி குறித்து பேசியது என இவரது பல பேச்சுக்கள் பேசு பொருளானது. இதனையடுத்து பொன்முடிக்கு எதிராக கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், கட்சியின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அடுத்த சில மாதங்களில் அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. எனவே தேர்தலை எதிர்கொள்ள மூத்த நிர்வாகிகளின் பங்களிப்பு முக்கிய தேவையாக உள்ளது. அந்த வகையில் பொன்முடியின் அதிருப்தியை குறைக்கும் வகையிலும், விழுப்புரம் மாவட்டத்தில் கட்சி பணியை துரிதப்படுத்தும் வகையிலும் பொன்முடிக்கு மீண்டும் துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக முதலமைசரும் தி.மு.க தலைவருமான மு.க. ஸ்டாலின், 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், தி.மு.க மாவட்ட நிர்வாகிகளிடம் ஒன் டூ ஒன் என சந்தித்து கருத்துகளைக் கேட்டு வருகிறார்.
இந்நிலையில், தி.மு.க தலைமைக் கழகம் கட்சியின் மூத்த தலைவர் பொன்முடியை துணைப் பொதுச் செயலாளராக நியமித்துள்ளது. அதே போல, அமைச்சர் மு.பெ. சாமிநாதனையும் துணைப் பொதுச் செயலாளராக நியமித்துள்ளது.