×

கோபியில் முதல் ஆளாக பிரச்சாரத்தை தொடங்கிய செங்கோட்டையன்..!!

 

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. 4 முனை போட்டியால் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

செங்கோட்டையன், அருண் ராஜ் என அந்தக் கட்சியின் முக்கிய முகங்கள் பலர் கொங்கு மண்டலத்தில் கவனம் செலுத்தி வருகிறார்கள். தேர்தல் அறிவிப்பு மற்றும் வேட்பாளர் அறிவிப்பிற்கு முன்னதாகவே அருண்ராஜ் திருச்செங்கோடு தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். அதேபோல செங்கோட்டையனும் கோபிசெட்டிப்பாளையத்தில் பிரச்சாரம் தொடங்கிவிட்டார்.

கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் செங்கோட்டையன் 9 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலிலும் அதே தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தார். தவெகவில் இணைவதற்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். 2026 தேர்தலிலும் செங்கோட்டையன் கோபி தொகுதியில் தான் போட்டியிடுகிறார்.

இன்று காலை அதிகாரபூர்வமாக கோபி தொகுதியில் அவர் பிரச்சாரத்தையே தொடங்கிவிட்டார். பொது மக்களுக்கு லட்டு கொடுத்து தனக்கு விசில் சின்னத்தில் ஆதரவளிக்குமாறு வாக்கு சேகரித்தார்.