“சிக்கலில் மாட்டி விடாதீர்கள்”-விஜய் பிரதமர் வேட்பாளரா என்ற கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்
எல்லா கேள்விகளுக்கும் முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “புதிய தலைமைச் செயலகம் தேவையான ஒன்று. தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புகள் சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் வெளியிடப்படுவது அனைத்து முதலமைச்சர்களும் பின்பற்றி வந்த நடைமுறை. தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யின் ஆற்றல், சிந்தனை மற்றும் தொலைநோக்குப் பார்வை தமிழகத்தின் ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. எல்லா கேள்விகளுக்கும் முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
முதல்வர் விஜயை பொறுத்தவரை தெளிவாக இருக்கிறார், இந்த தமிழகம் அவரை நம்பி வாக்களித்துள்ளது. தமிழ்நாடு மக்களை காப்பதற்காக, அவர் என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமோ அவை அனைத்தையும் செய்து வருகிறார். அதனால் இப்படி கேள்வி கேட்டு என்னை சிக்கலில் மாட்டி விடாதீர்கள். முதன்முறையாக நேற்று முன்தினம் ஒரு மகளிர் சட்டப்பேரவையை நடத்தினார்கள். நேற்று இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஒருவர் அவையை நடத்தினார். எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்பதுதான் முதல்வர் விஜய்யின் நோக்கம்” என்றார்.