ஆட்சியமைக்க பாஜகவிடம் நாங்கள் எந்த உதவியையும் கேட்கவில்லை- செங்கோட்டையன்
ஆட்சியமைக்க பாஜகவிடம் நாங்கள் எந்த உதவியையும் கேட்கவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “முதலமைச்சரின் தொலைநோக்கு சிந்தனை என்பது நேர்மையான ஆட்சியை வழங்குவதுதான். பேரவைக்கு உள்ளே இருந்து எதிர்க்கட்சிகள் கேட்டிருந்தால் முதலமைச்சர் பதில் சொல்லியிருப்பார். பேரவைக்கு வெளியே சென்று எதிர்க்கட்சியினர் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கின்றனர். திமுகவை மக்கள் ஏற்காததால்தான் அக்கட்சி தலைமை தேர்தலில் தோற்கடிக்கப்பட்டது. நயினார் நாகேந்திரனை பொறுத்தவரை அவர் எப்போதுமே அரசியல் மேடைகளில் காமெடி பேசுகின்றவர். அவரது பேச்சுகளுக்கு பதில் அளித்து நமது நேரத்தை வீண்டிக்க தேவையில்லை. குடியரசுத் தலைவரும், ஆளுநரும் ஒன்றுதான், மத்திய - மாநில உறவுகளை உருவாக்குவது ஆளுநரின் பணி.
ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என்று நாங்கள் சொல்ல மாட்டோம். தவெக ஆட்சியமைக்க பாஜகவிடம் உதவி கேட்கவில்லை. ஆனால் தவெக உதவி கேட்டதாக நயினார் நாகேந்திரன் காமெடி செய்கிறார். தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாதபோது, ஆட்சி அமைப்பதற்காக தவெக பலரிடமும் ஆதரவு கோரியது என நயினார் நாகேந்திரன் பொய் சொல்கிறார். தவெக ஆட்சிக்கு வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று குழந்தைகள் தான். குழந்தைகள் பெற்றோர்களை தவெகவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டதுதான் காரணம். நடிப்பின் உச்சத்தில் இருந்துவிட்டு அரசியலுக்கு வந்த முதல்வர் விஜய்க்கு சட்டப்பேரவையில் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.