"விஜய்க்கு செங்கோல் வழங்கியது ஏன்?”- செங்கோட்டையன் விளக்கம்
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இணைந்து கொள்வது சரியானதாக இருக்கும் என தவெக மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கேஏ செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு த வெ க மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே ஏ செங்கோட்டையன் இன்று வருகை தந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்த பின் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கினர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, “தமிழக வெற்றி கழகத்தின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மாநாடு போல் நடைபெற்றது. சிறப்பான முறையில் நிகழ்ச்சி நடைபெற்றதால் விஜயாபுரி அம்மன் கோவிலிலும் சத்தியமங்கலம் ஆஞ்சநேயர் கோவில்களும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் மக்கள் வெள்ளத்தில் மிதந்தார். வரலாறு படைக்கிற நிகழ்ச்சியாக வந்திருக்கிறது. விஜய் சந்திப்பு நிகழ்ச்சிக்கு காவல்துறை முழு ஒத்துழைப்பு வழங்கியது. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஒரு லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்டனர். எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு செங்கோல் வழங்கினார். அதேபோல தமிழகத்தில் சிறப்பான ஆட்சி அமைய தவெக தலைவர் விஜய்க்கு செங்கோல் வழங்கினேன்.
அமைச்சர் சேகர்பாபுவை சந்தித்த பின் தவெகவில் இணைந்ததால் திமுகவின் பி டீமாக நீங்கள் செயல்படுகிறீர்கள் என நயினார் நாகேந்திரன் கூறுகிறார். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இணைந்து கொள்வது சரியானதாக இருக்கும். பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அதிமுகவின் பி டீம் ஆக இருக்கிறார்” என்றார்.