234 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடக்கூடிய சிறந்த வேட்பாளர்கள் தவெக-வில் உள்ளனர் - செங்கோட்டையன்..!
கோவை விமான நிலையத்திற்கு வந்த செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது என்டிஏ உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா என நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறுகையில், "திரைத்துறையில் உச்ச அந்தஸ்து, எல்லாத்தையும் விட்டுவிட்டு விஜய் வர காரணம் முதலமைச்சர் என்ற இலக்கை அடைவதற்காகதான். விஜய்தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். அவர் தான் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர்” என்றார். இதன் மூலம் என்டிஏ உடன் கூட்டணி கிடையாது என செங்கோட்டையன் சூசகமாக கூறியுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தொடர்ந்து பேசிய அவர், ”டெல்லியில் நடைபெற்ற சிபிஐ விசாரணையில் தவெக தலைவர் விஜய் உரிய பதிலை அளித்துள்ளார். தற்போது அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் அதிக அளவில் திரண்டு வருகின்றனர். தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை சீராக இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பொதுமக்கள் அச்சத்துடன் வாழும் சூழல் நிலவுகிறது” எனஅவர் குற்றம்சாட்டினார்.
மேலும் பேசிய அவர், "திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற மனநிலையில் மக்கள் உள்ளனர். மாற்றத்தை கொண்டு வரக்கூடிய திறன் விஜய்க்கு மட்டுமே உள்ளது. 234 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடக்கூடிய சிறந்த வேட்பாளர்கள் தவெக கட்சியில் உள்ளனர். மக்கள் இவ்வளவு அதிகமாக ஆர்ப்பரித்து வருவதை இதற்கு முன் பார்த்ததில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பின்னர் விஜய்க்காக மட்டுமே அதிக அளவில் மக்கள் வருகின்றனர்" என செங்கோட்டையன் தெரிவித்தார்.