ஜெயலலிதாவால் ரிஜெக்ட் செய்யப்பட்டவர் தான் செங்கோட்டையன் - இபிஎஸ் அட்டாக்..!!
Updated: Apr 18, 2026, 17:39 IST
அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியபோது, "கோபிசெட்டிபாளையம், பவானிசாகர், அந்தியூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களும் முத்தான வேட்பாளர்கள். நானும் விவசாயி என்பதால் வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதியளித்தேன். திமுக ஆட்சியில் இத்திட்டம் நிறுத்தப்பட்டது. பவானிசாகர் அணை வறட்சியான காலத்தில் பாண்டியாறு- புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற முயற்சி எடுத்தோம். கேரளம் முதலமைச்சரிடம் பேசி, மழைக் காலத்தில் வீணாகும் தண்ணீரைத் தடுத்து பவானிசாகர் அணைக்கு கொண்டு வர பாடுபட்டோம். ஆனால் அதற்குள் ஆட்சி நிறைவடைந்ததால் அத்திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.
ஜெயலிலதா முதலமைச்சராக இருந்தபோது செங்கோட்டையன் மீது அவரது மனைவி, மகன் ஆகியோர் புகாளித்தனர். என்ன புகார் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. ஜெயலலிதாவால் ரிஜெக்ட் செய்யப்பட்டவர் தான் செங்கோட்டையன். கோபிசெட்டிப்பாளையம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ செங்கோட்டையனை பார்க்கவே முடியாது. தற்போதைய வேட்பாளர் பிரபுவை நீங்கள் எப்போது வேண்டுமாலும் பார்க்கலாம்.
அதிமுக ஆட்சியில் 5 லட்சம் கோடியாக இருந்த கடன், திமுக அரசு வந்தவுடன் ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. பவானி ஆற்றில் 7 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுத்தபோதும் அதை திமுக தடுத்தது. அவிநாசி- அத்திக்கடவுத் திட்டத்தில் விடுபட்ட பகுதிகள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்; விடுபட்ட பகுதிகளில் அவிநாசி- அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றப்படும்.
மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் அம்மா கிளினிக் திறக்கப்படும். மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தால் மலைவாழ் மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும். கிராமம் முதல் நகரம் வரை கஞ்சா விற்பனை திமுக ஆட்சியில் உள்ளது. இதற்கு திமுகவினர் துணையாக உள்ளனர். அதிமுக ஆட்சி வந்த உடன் மூன்றே மாதத்தில் போதைப்பொருள் ஒழிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்