கர்ப்பிணிகள், முதியோர் விஜயைப் பார்க்க வரவேண்டாம் - செங்கோட்டையன் வேண்டுகோள்
சேலத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் கூட்டம் புதிய வரலாறு படைக்கும் என செங்கோட்டையன் சேலத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நாளை மறுதினம் 13ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஐந்தாயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. அவர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளில் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக வெற்றி கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். விஜய் பேசக்கூடிய இடம், கூட்டத்தில் பங்கேற்க உள்ள நிர்வாகிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள், மருத்துவ வசதிகள், கார் வந்து செல்லும் இடம் முக்கிய பிரமுகர்கள் அமருமிடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் நேரடியாக சென்று அவர்கள் பார்வையிட்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்,சேலத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சேலத்தில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சி தமிழகத்தில் புதிய வரலாறை படைக்கும்,தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் வகையில் 2026 தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தமிழக ஆட்சிக் கட்டிலில் அமருவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், சென்னையில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் திமுகவினரால் தாக்கப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்று. பொதுமக்களுக்கும் சமூக ஊடகங்களுக்கும் யார்? தாக்குதல் நடத்தினார்கள் என்று நன்றாக தெரியும். பொதுமக்களே அதனை வெளிச்சத்திற்கு கொண்டு வருவார்கள். விஜட் அவர்களின் கூடுதல் பங்கேற்பு நிகழ்ச்சி விவரங்கள் குறித்து பின்பு வெளியிடப்படும். சேலம் சீலநாயக்கன்பட்டியில் பிப்.13 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு வயதானவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் வர வேண்டாம் கூட்டத்திற்கு வரும் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்றும் தெரிவித்தார்.