மோடியின் கூட்டாளிகளான அம்பானி, அதானிக்கான பட்ஜெட் - செல்வப்பெருந்தகை
தமிழகத்தின் முதல் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் 131 வது பிறந்தநாளையொட்டி அவரது படத்திற்கு, சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, காங்கிரஸ் முன்னோடி ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தன்னுடைய வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்தவர். அறநிலையத்துறைக்கு தனி சட்டத்தை இயற்றியவர் ஓமந்தூரார். அவருக்கு மரியாதை செலுத்துவதில் தமிழக காங்கிரஸ் பெருமை கொள்கிறது.
இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒன்றிய பட்ஜெட் அம்பானி, அதானிக்கும், பிரதமரின் கூட்டாளிகளுக்கும்மான நிதிநிலை அறிக்கையாக இருக்கும். அடித்தட்டு மக்களுக்கு எதுவும் இருக்காது. தேசத்தின் பொருளாதாரம் அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது. தேர்தல் வரை தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இருக்காது. அதன் பிறகு பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு உயர்த்தும். ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு உருவச்சிலை அமைக்கப்படும் என்று அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திமுக விடம் இருந்து காங்கிரஸ் கைநழுவி போய்டுவிடும் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார். உண்மையில் தமிழ்நாடு தான் அவரிடம் இருந்து கைநழுவ போய்கிறது. பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அவரது ஆட்சி கனவு ஒருபோதும் பலிக்காது. அந்த கூட்டணி தோல்வியை தான் சந்திக்க போகிறது.
திமுக- காங்கிரஸ் தொகுதி பங்கீடு தொடர்பாக ஏற்கனவே கனிமொழி எம்.பி. ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தி வந்துள்ளார். மேல்மட்டத்தில் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக தி.மு.க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அழைப்பு வந்ததும் அதிகாரபூர்வமாக பேச்சுவார்த்தை தொடங்கும். தமிழ்நாட்டில் காங்கிரஸ் வலிமையாக இருக்கிறது. அதனால் தான் த.வெ.க.தலைவர் விஜயின் தந்தை சந்திரசேகர் காங்கிரசுக்கு அழைப்பு விடுத்தார். அதைதான் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நேற்று விமான நிலையத்தில் சூட்டிகாட்டினார். அதை தாண்டி அரசியல் ரீதியாக இதை மிகைப்படுத்த வேண்டாம் என கூறினார்.