செப்.7ல் ‘வாக்கு திருட்டு’ பற்றிய விளக்க மாநில மாநாடு - செல்வப்பெருந்தகை அறிவிப்பு..!!
திருநெல்வேலியில் வருகிற செப்டம்பர் 7ம் தேதி ‘வாக்கு திருட்டு’ பற்றிய விளக்க மாநில மாநாடு நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து நடத்தி வரும் "வாக்கு திருட்டு" பற்றி விளக்க மாநில மாநாடு வருகின்ற செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி மாலை 4.00 மணியளவில் திருநெல்வேலியில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இம்மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற இந்நாள் - முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், காங்கிரஸ் கமிட்டிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகளும் பங்கேற்பார்கள்.
இந்திய அரசியலமைப்பை காக்கவும் நமது வாக்குரிமையை பாதுகாக்கவும் அனைத்து ஜனநாயக சக்திகளும் அணி திரள அன்போடு அழைக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.