“விஜய்யின் தந்தைக்கே தவெகவில் மரியாதை இல்லை! கூட்டம் ஓட்டாக மாறாது”- செல்வகுமார் பேட்டி
தவெக தலைவர் விஜயின் முன்னாள் மேலாளரும் கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பி.டி.செல்வகுமார் தனது ஆதரவாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க வில் இணைந்தார்.
திமுகவில் இணைந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய விஜயின் முன்னாள் மேலாளர் பி.டி. செல்வக்குமார், “விஜயின் மக்கள் இயக்கத்திற்கு தூணாக இருந்தவன் நான். மக்களுக்கு முறையாக விஜய் சேவை செய்வாரா என தெரியவில்லை. விஜயுடன் ஆரம்ப காலத்தில் இருந்தவர்களுக்கு தவெகவில் பொறுப்பு வழங்கப்படவில்லை. ஜய்க்கும் அவரது தந்தை இருக்கும் உறவு என்பது முன்பிருந்ததைப் போல் இல்லை. அப்பாவையே அவரை விட்டு பிரிக்கிறார்கள் என்றால் நாம் எல்லாம் எம்மாத்திரம். விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கே தவெகவில் மரியாதை இல்லை. ஆனால் விஜய்காக அவர், அவ்வளவு தியாம செய்திருக்கிறார். விஜய்யின் தந்தை சந்திரசேகர், உடல், பொருள், ஆவி என அனைத்தையும் அவருக்காக தியாகம் செய்தார். புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கடைசியாக சேர்ந்த நாஞ்சில் சம்பத் வரை யாரும் பெரிய தியாகிகள் கிடையாது.
எனக்காக போஸ்டர் ஒட்டியவர்கள், கட் அவுட்டிற்கு பால் ஊற்றியவர்களுக்குதான் முக்கியத்துவம் கொடுப்பேன் என விஜய் சொன்னார். இப்போது அந்த கட்சியில் இருக்கும் முக்கியமான 7 பேரை சொல்கிறேன். அவர்கள் எல்லாம் ரசிகர் மன்றத்தில் இருந்தவர்களா? அவருக்காக ஆரம்ப காலத்தில் உழைத்தவர்கள் யாரும் அந்த கட்சியில் இல்லை. விஜய் ஒரு நடிகராக சிறப்பாக பணியாற்றியதால் அவருடன் பயணித்தேன். விஜய் மக்களையும், ரசிகர்களையும் சரியாக வழி நடத்துவரா என்பது எனக்கு தெரியவில்லை. விஜய்யை பார்க்க கூட்டம் வரும், ஆனால் அவருக்கு வாக்களிப்பார்கள் என்று கனவில் கூட நினைக்க கூடாது.” என்றார்.