“செங்கோட்டையனை வைத்து கூட்டணிக்காக நிறைய முயற்சிகளை தவெக செய்தது”- செல்லூர் ராஜூ
சசிகலா கட்சி ஆரம்பித்தது பற்றி நான் பார்க்கவே இல்லை, எனக்கு தெரியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரை கோரிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “முல்லை பெரியாறு திட்டத்தை முறையாக நிறைவேற்றவில்லை, கழிவு நீர் முறையாக அகற்றவில்லை. இது பற்றி முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம். ஊடகங்கள் நீங்கள் மதுரை வந்த முதல்வரிடம் கோடை நிதியாக 2 ஆயிரம் கொடுத்தாரே இந்த வருடம் மட்டும் ஏன் கொடுத்தீர்கள் என யாராவது கேட்டீர்களா? ஜெயலலிதா பெண்கள் திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். 3ஆம் கட்ட தேர்தல் அறிக்கை குறித்து நீங்கள் பொது செயலாளரிடம் கேளுங்கள் இல்லை என்றால் நான் கேட்டு சொல்கிறேன். சசிகலா கட்சி ஆரம்பித்தது பற்றி நான் பார்க்கவே இல்லை, எனக்கு தெரியாது. நான் கிராமத்தில் இருந்தேன். எனக்கு டவர் கிடைக்காது. காலையில் பேப்பர் கூட பார்க்கவில்லை.
தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு எழுச்சி இருக்கிறது. எத்தனை முகங்கள் புதிதாக வந்தாலும் அது அடிபட்டு போகும். கூட்டம் எல்லோருக்கும் கூடும். கூட்டம் கூடுவதை வைத்து ஒருவரின் பலத்தை முடிவு செய்ய முடியாது. கூட்டம் கூடும், ஓட்டாக மாறாது. ஓ.பன்னீர்செல்வத்தை நாங்கள் மறக்கவே மாட்டோம். அவரை நினைத்துக் கொண்டே தான் இருப்போம். இவரை போய் ஜெயலலிதா முதல்வராக ஆக்கினார்களே என நினைத்து நினைத்து வருந்துகிறோம். பாஜக ஆட்சியில் தான் நிறைய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிறைய திட்டங்களை பாஜக தான் கொடுத்திருக்கிறது. 'மோடியா லேடியா' என ஜெயலலிதா சொன்னது தேர்தலுக்கு தான். தேர்தலுக்கு தேர்தல் இப்படி ஏதாவது சொல்வார்கள். அரசியலில் எல்லாம் மாறும். தனக்கு ஒன்று கிடைக்கவில்லை என்பதால் நரி இந்த பழம் புளிக்கும் என சொல்வது போல, விஜய் தனக்கு கூட்டணி அமையவில்லை என்பதால், கூட்டணி எல்லாம் எடுபடாது என பேசிக் கொண்டிருக்கிறார். செங்கோட்டையனை வைத்து கூட்டணிக்காக நிறைய முயற்சிகளை தவெக செய்தது” என்றார்