3,80,474 வாக்காளர்கள் நீக்கம்! தொகுதி மாறி போட்டியிட விருப்பமனு வழங்கிய செல்லூர் ராஜூ
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் தலா 4 தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு வழங்கியுள்ளனர்.
அதிமுக சார்பில் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ள நிர்வாகிகளிடம் விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக வின் முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் எந்த தொகுதியில் போட்டியிட உள்ளனர், தொகுதி மாறுகிறார்களா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜ்யசபா உறுப்பினராக உள்ள சிவி சண்முகம் தனது விழுப்புரம் தொகுதியில் இருந்து மயிலம் தொகுதிக்கு மாற விருப்பம் தெரிவித்தார். அவரை போலவே முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் உள்ள மதுரை வடக்கு, மேற்கு, மத்தி, தெற்கு என 4 தொகுதிகளுக்கும் விருப்ப மனு வழங்கியுள்ளார்.
இதற்கு முன் 4 முறை மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு 3 முறை வெற்றி பெற்றுள்ளார். இந்த 2026 தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் வெற்றி வாய்ப்பு மந்தமாக இருப்பதாகவும், அதனால் தேர்தல் நெருங்கும் நேரத்தில் கள நிலவரத்தை பொறுத்து தொகுதி மாறலாமா என்றும் முடிவு செய்ய 4 தொகுதிகளுக்கும் விருப்ப மனு வழங்கியுள்ளார். அதேபோல, தேமுதிகவில் இருந்து அதிமுக வந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 4 தொகுதிகளுக்கு விருப்ப மனு வழங்கியுள்ளார். கடந்த 2011ம் ஆண்டு தேமுதிக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து அதிமுகவில் இணைந்ததும் 2016ல் ஆவடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சர் ஆனார். 2021தேர்தலில் அதே ஆவடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதனால் மீண்டும் ஆவடி தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு சந்தேகம் என்பதால் முன்னெச்சரிக்கையாக சொந்த மாவட்டமான விருதுநகரில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதனால் விருதுநகர், சாத்தூர், ராஜபாளையம் ஆகிய தொகுதுகளுக்கும், ஆவடி தொகுதிக்கும் என 4 தொகுதிகளுக்கு விருப்ப மனுவை வழங்கியுள்ளார். இதில் ராஜபாளையம், விருதுநகர் 2 தொகுதிகளுக்கு அதிமுகவில் பலர் விருப்பம் தெரிவித்து மனு வழங்கி வரும் நிலையில் மாஃபா பாண்டியராஜன் தனக்கு எந்த தொகுதி கிடைக்கும் என்பது குழப்பத்தில் உள்ளார்.