"பருவ மழைக்கு முன் சாலைகளை சீர் செய்ய வேண்டும்" - செல்லூர் ராஜூ
ஜூலை 11ம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தொடர்கிறார். அதே சமயம் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் என்றும் எடப்பாடி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு , அதிமுக வெற்றி சரித்திரத்தில் மற்றும் ஒரு மகுடமாக சிறப்பான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கி உள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்பால் தொண்டர்கள் மத்தியில் இருந்த குழப்பம் நீங்கியுள்ளது. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அம்மாவிடம் அரசியல் கற்றவர். தொண்டர்களை அரவணைப்பது , கட்சியை வளர்ப்பதில் முன்னோடியாக அவர் திகழ்கிறார். இந்த வெற்றி எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த வெற்றியாக தெரிகிறது என்றார்.
தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜு, திமுக ஆட்சிக்கு வந்ததும் நகை கடன் தள்ளுபடி செய்வேன் என்று சொன்னார்கள் , செய்யவில்லை. குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கவில்லை. பலத்திட்டங்கள் திமுக செயல் படுத்தவில்லை .பல்லி சொன்ன மாதிரி சுசு..சுசு என சொல்லிக் கொண்டிருக்கிறனர். நிதி அமைச்சர் தன் செல்வாக்கை பயன்படுத்தி மதுரை மக்களுக்கு நிதியை பெற்று பல திட்டங்களை செயல்படுத்த வேண்டும் , பருவமழைக்கு முன் சாலைகளை சீர் செய்ய வேண்டும் என்றார்.